28 ஜூலை, 2012

கீழக்குயிக்குடி செட்டிப்புடவும் மகாவீரர் சிற்பமும்...

மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் நாகமலைப் புதுக்கோட்டை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்கு பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சமணமலை அமைந்துள்ளது. கீழக்குயில்குடி சிற்றூருக்கு அரை கி.மீ முன்னரே சமணமலை அமைந்துள்ளது. கீழக்குயில்குடி மலைக்கு தென்கிழக்கு பகுதியில் அமைதுள்ளது செட்டிப்புடவு. 

மலைக்கு கீழே குளத்திற்கு அருகில் அமைதுள்ள அய்யனார் கோவிலில் இருந்து தென் திசை நோக்கி செட்டிபுடவிற்கு  செல்ல வேண்டும். பாதையின் இருபுறமும், மலையை ஒட்டிய வாறும் மரங்கள் நிறைந்துள்ளது. செட்டிபுடவு நோக்கிச் செல்லும் போது பாதையின் இடது புறத்தில் மற்றுமொரு அழகிய தெப்பக்குளம் ஒன்று குறைவான நீரோடு காட்சி தந்தது. செட்டிப்புடவு பகுதியை நெருங்கியதும் மலையில் நீண்ட படிகள் அழகாக வெட்டப்பட்டிருந்தன. சுமார் 100 படிகள் மலையை ஒட்டியவாறு அமைந்திருந்தது. படிகளில் ஏறி மேலே சென்றால்... 

மிகப்பெரிய தரைத்தளம் உள்ளது. அதனைச் சுற்றிலும் மூன்றடி உயரத்திற்கு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருந்தது. தளத்தின் கிழக்குப் பகுதியில் குகை போன்ற அமைப்பு உள்ளது. குகை மிகப்பெரிதாக இருந்தது. ‘புடவுஎன்ற சொல் குகை போன்ற அமைப்பைக் குறிக்கும். ‘செட்டிப்புடவுஇயற்கையாக அமைந்த குகைத்தளம் உள்ளது. செட்டிப்புடவில் குகையை ஒட்டிய மிகப்பெரிய பாறையின் முகப்பில் மிகப்பெரிய அளவில் தரைத்தளத்திலிருந்து சுமார் 10 அடிக்கு மேலே சிலையொன்று புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இப்புடைப்புச் சிற்பம் கி.பி 9-10ம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
அக்காலத்திலேயே இவ்வளவு உயரத்தில், எத்தனை நாட்களாக இச்சிற்பத்தை செய்தனரோ? சிற்பம் மிகத்துல்லியாகவும், அழகாகவும் செதுக்கப்பட்டிருந்தது. முக்குடையின் கீழ் மகாவீரர் மூன்று சிங்கங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்திருக்கிறார். மகாவீரரின் இருபுறமும் இருவர் சாமரம் வீசுகின்றனர். மேலே முக்குடையின் இருபுறமும் வானவர்கள் (தூதர்கள் இருவர் பறந்து வருகின்றனர். சிற்பத்தின் மேலே அரசமரத்தின் இலைகள் சுருள்சுருளாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது.
சிற்பங்களைப் பற்றியும், கல்வெட்டுகள் பற்றிய செய்தியையும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கூற வந்திருந்தவர்கள் அனைவரும் தரைத்தளத்திலும், பாறைகளிலும் அமர்ந்து கேட்டனர். பார்பதற்கு வகுப்பறை போன்று காட்சி தந்தது. இங்குள்ள மகாவீரர் சிற்பத்தின் காது நீண்டு காணப்படுவதால் மக்கள் செட்டியார் சிலையென நினைத்து இப்பகுதியைசெட்டிப்புடவுஎன அழைக்கின்றனர்

கல்வெட்டு விளக்கம்வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டெழுத்து வாசகம். இதன் மூலம் குறண்டி திருக்காட்டாம் பள்ளியில் பயின்ற மாணவர்களால் இச்சிற்பம் செய்யப் படுள்ளது என்பதை அறிய முடிகிறது.

பாறையை ஒட்டி அமைந்துள்ள குகையின் உட்பகுதியின் மேல்புறத்தில் ஐந்து புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அதில் முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் உருவம் மற்ற சிற்பங்களுக்கு நடுவாக மூன்று சிற்பங்களாகவும், இதர இரண்டு சிற்பங்கள் பெண்களின் உருவம் கொண்ட சிற்பங்களாகவும் உள்ளது. இவை இடப்புறத்திலிருந்து முதலாவதாகவும், ஐந்தாவதாக கடைசி சிற்பமாகவும் உள்ளது. சிற்பங்களில் உள்ள பெண்களை ’இயக்கி’ என்று அழைப்பார்கள் என சாந்தலிங்கம் அய்யா கூறினார்.

முதலில் உள்ள இயக்கி சிங்கத்தின் மீது உட்கார்ந்தவாறு எதிரே யானை மேல் உள்ள ஒருவரை எதிர்கொள்வது போல செதுக்கப்பட்டுள்ளது. இவ்வியக்கியின் பெயர் கொற்றாகிரியா. இடமிருந்து வலமாக கடைசியில் உள்ள சிற்பத்திலுள்ள இயக்கி தனது இடது காலை மடக்கியவாறும் வலதுகாலை கீழே தொங்கவிட்டவாறும்சுகாசனநிலையில் அமர்ந்துள்ளார். இவ்வியக்கியின் பெயர் அம்பியா. இவரின் இருபுறமும் இரண்டு பெண்கள் (பணிப்பெண்களாக இருக்கலாம்) நின்றவாறு காட்சி தருகின்றனர். ஒவ்வொரு சிற்பங்களின் கீழும் அவற்றை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
முதல் சிற்பத்தை ஒருவரும், அடுத்த மூன்று சிற்பங்களை ஒருவரும், கடைசி சிற்பத்தை ஒருவரும் செய்து கொடுத்துள்ளனர்.
ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகுணசேன தேவர் சட்டன் தெய்வ பலதேவர் செய்விச்ச திருமேனி
ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டித் திருக்காட்டாம்பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி
ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேனதேவர் சட்டன் அந்தலையான் களக்குடி தன்னைச் சார்த்தி செய்வித்த திருமேனி
மாதேவிப் பெரும்பள்ளிக்கு நெடுங்காலமாய் பொறுப்பு வகித்த குணசேனதேவர் மற்றும் அவருடைய மாணாக்கர்கள் இச்சிற்பங்களை செய்து கொடுத்து பாதுகாத்தனர் என்பதை இவ்வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் அறியலாம்.
அருமையான வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டு, சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் நண்பர்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். செட்டிப்புடவை விட்டு கீழே வந்தோம். மரத்தடியில் பசுமைநடைக் குழுவினரால் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

படிக்க : கீழக்குயில்குடியும் சமண பள்ளியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக