27 ஜன., 2013

கலை இலக்கிய இரவு...

பொழுது விடிந்தது முதல் பொழுது அடையும் வரை ஒடும்... வாழ்க்கையின் வேகத்தை அளக்கும் கருவி ஒன்றுதான் இல்லை. இருந்துவிட்டால் தெரிந்துவிடும் எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றோம் என்று. இன்றைய பொருளாதார தேவையினை இலக்காக கொண்டு ஓடும் இந்த ஒட்டத்தில், வெற்றி இலக்கை மட்டும் அவரவர் நிர்ணயித்து கொள்கின்றனர். இப்படிபட்ட எந்திர யுகத்தில் இயற்கையின் மாற்றமும், சமூக கட்டமைப்பின் மாற்றமும் மாறிக் கொண்டே வருகிறது.

இவைகளை நமது வேகத்தில் பார்த்துக் கொண்டிருப்பது என்பது இயலாததுதான். இயலாது என்பதால் தான், இன்று நாம் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியாமால் கடந்து சென்று கொண்டிருக்கிறோம், அதனதன் தேவையை உணராமல்... நாம் நின்று கவனிக்கும் பொழுது அவற்றில் பல நம் கண்களுக்கு மிகத்தொலைவில் இருப்பதை உணருவோம்... பலருக்கு தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு.

அப்படி ஒன்றைத்தான் நான் சென்று கொண்டிருந்த வாழ்க்கை ஓட்டத்தின் வழியில் காண நேர்ந்தது. அது கலை இலக்கிய இரவு 2013, நாள்சனவரி 26 சனிக்கிழமை, மாலை 6 மணி இடம்தல்லாகுளம் பெருமாள் கோவில் திடல், மதுரை என்றதமுஎகச’ வின் நிகழ்ச்சி விளம்பரம் தாங்கிய பேனர். வருடத்திற்க்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி அது. நேரம் கிடைத்தால் சென்று பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால் அன்று குடியரசு தினம் விடுமுறை என்பதால் மாலை நிகழ்ச்சிக்கு செல்வதற்கு மனம் தயாரானது கலை இலக்கிய இரவிற்கு.

இடத்தை நெருங்கும் முன் தப்பாட்ட ஒலி காதை வந்தடைந்த்துஒலி இசையாக வரும் திசை நோக்கி சென்றேன். அங்குதமுஎகசவின்  கலை இலக்கிய இரவு பகல் போல பிராகசித்துக் கொண்டிருந்தது. கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அப்பொழுது மனதில் ஒன்று தோன்றியது... நின்று கவனிக்கும் பொழுது அவற்றில் பல நம் கண்களுக்கு மிகத்தொலைவில் இருப்பதை உணருவோம் என்ற என் வரிகளுக்கு... பதிலாக வாழ்க்கையின் வேகத்தில் நின்று கவனித்தவர்கள் இவ்வளவு பேர் என்று.

‘தமுஎகசவின் கலை இலக்கிய இரவில், கிராமியக் கலைகளை போற்றி கொண்டாடும் தமுஎகச இலக்கிய இரவு தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது போதாது என்பதற்கேற்ப, மேடை அதிர... அதிர... சுடர் தப்பாட்ட குழுவினர் என்ற வரிக்கு சற்று அதிகமாகவே அந்த திடலையே அதிர வைத்தனர் சுடர் தப்பாட்ட குழுவினர். நண்பர் சுந்தர் அதனை புகைப்படமாக பதிவு செய்ததை இணைத்துள்ளேன். சிறிது தாமதமாக சென்றதால் கங்கை கருங்குயில்களின் நையாண்டி மேள நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் போனது. அதையும் நண்பர் சுந்தரின் புகைப்படத்தின் வழியாக காணமுடிந்தது.

அதனைத் தொடர்ந்து, நெருப்பை தன் வாய் வழியாக ஊதிக் கொண்டு நடனம் ஆடினார் தோழர் ஷேக். நெருப்பில் பல சாகசங்களை செய்து காட்டினார். மிகவும் ஆபத்தான அந்த செயலை செய்வதற்கு தேவையான மண்ணெண்னையை எதோ... குளிர்பானத்தை பருகி கொண்டு வருவது போல் வந்து, நெருப்பை தன் வாய் வழியாக ஊதித்தள்ளினார். தன் தலை, உடம்புகளில் நெருப்பை எரிய வைத்து காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் தமுஎகச’வின் மதுரை மாவட்டத் தலைவர் பா. கவிதாக்குமார் தோழர் ஷேக்கிற்க்கு நினைவுபரிசு வழங்கி பாராட்டினார்.

அவர்களைத் தொடர்ந்து  சதங்கை கலைக் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் மாடாட்டம் நிகழ்ச்சிகள்சமூகத்தில் நிலவிவரும் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வுகளை சிறப்பாக தங்களின் ஆடல் பாடல்களுடன் நிகழ்த்திக் காட்டினர்.

பின்னர், மானுடம் பாடும் மண்ணின் கவிஞர்களுக்குப் பாராட்டு விழா அரங்கேறியது. மண்ணின் கவிஞர்களாக... கவிஞர் பரிணாமன், கவிஞர் நவகவி மற்றும் கவிஞர் வையம்பட்டி முத்துச்சாமி ஆகிய மூவருக்கும் .கவிதாக்குமார் மற்றும் சாந்தாராம் (தலைவர், தமுஎகச, மதுரை) பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர். கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் (மாநில துணைத்தலைவர், தமுஎகச) கவிஞர்களைப் பாராட்டி உரையாற்றினார்.

ஊருக்கு உண்மை சொல்வேன்... என்ற நிகழ்ச்சியில் காவல்கோட்டம் நாவலுக்காக 2012க்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், நாடு குடியரசு ஆன நாட்களிலிருந்து இன்று வரையான அரசியலமைப்பு எவ்வாறு உள்ளது என்பதனைப் பற்றி மிக நேர்த்தியான சில உவமைகளுடன் எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் துணை ஆணையர் ஆர். திருநாவுக்கரசு .கா. (சட்டம் ஒழுங்கு) சமூகத்தில் சிந்தனை என்பது ஒவ்வொருவருக்கும் எப்படியிருக்க வேண்டும் என்றும், ஒழுக்கம் என்பதை வாழ்வில் கடைபிடிக்கத் தேவையான வழிகளை மிக அழகான தூய தமிழில் அனைவரையும் சிந்திக்க வைக்கும் விதத்தில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக நீர்ப்பறவை திரைப்படத்தை இயக்கிய இயக்குநரும், மதுரை - திருநகரைச் சொந்த ஊராக கொண்ட சீனு ராமசாமிக்கு பாராட்டுவிழா அரங்கேறியது. அவரை பாராட்டி பேசியவர் மேடை கலைவாணர் என்று மதுரை மக்களால் போற்றப்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமுஎகசவின் மாநில துணைத் தலைவருமாகிய என். நன்மாறன் அவர்கள். அவருடைய உரையை பற்றி அறியாத மதுரை மக்கள் இருந்திட முடியாது.

தனது நகைச்சுவை பேச்சுடன் பல சமூக அக்கறை செய்திகளை மக்களிடத்தில் எளிதாக தந்துவிட அவருக்கு நிகர் வேரொருவருமிருக்க முடியாது. நிகழ்ச்சியில் சீனு ராமசாமி, திரையுலகில் தான் கடந்துவந்த பாதையையும், சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் உள்ள சிரமங்களையும் பற்றி கூறினார். அவருக்கு நினைவு பரிசினை மதுரவல்லி (தமுஎகச, மதுரை) வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சமூக அவலங்கள் குறித்த பல மேடை நாடகங்கள் அரங்கேறின. மணி பதினொன்றைத் தாண்டியது. தூங்கா நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்னவோ? தை மாத குளிரிலும் மக்கள் கூட்டம் கலையாமல் உறைந்திருந்தனர் தமுஎகச’வின் கலை இலக்கிய இரவில். மதுரை மக்கள் கலையையும், பண்பாட்டையையும் காப்பவர்கள், காத்து ரசிப்பவர்கள் என்பதனை இந்த நிகழ்ச்சி எனக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது. தமுஎகசவினர் சமூக அவலங்களை போக்குவதற்காக எடுத்துவரும் செயல்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதனை இந்நிகழ்வு உணர்த்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக