27 பிப்., 2013

திருப்பரங்குன்றம் காசி விசுவநாதர் கோயில் கல்வெட்டு...

எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் அழகிய மலைக் குன்று திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் (இடது புறம்) கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு பல முறை சென்றிருந்தாலும், மலைமீது செல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. மலைமீது சிக்கந்தர் சுல்தான் பள்ளிவாசல் மற்றும் காசி விசுவநாதர் கோவில் என திருப்பரங்குன்றம் மலை சமயங்களின் நல்லிணக்கப் பகுதியாக திகழ்ந்து வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தமிழிக் (பிராமி) கல்வெட்டுகள் மூலம் அதனை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மலைமீதுள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள சுனையில் 2000 வருட பழமையான தமிழிக் (பிராமி) கல்வெட்டு ஒன்று சென்ற மாதம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 2000 வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் இங்கு தங்கி வாழ்ந்துள்ளனர் என்ற் வரலாற்றுச் செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த வரலாற்றுப் பகுதிக்கு பசுமை நடை மூலம் சென்று அவைகளை எல்லாம் கண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது, பெரும் மகிழ்வை தந்தது.


மாதத்தின் கடைசி ஞாயிறு ஒன்றில் காலை 6 மணியளவில் பசுமை நடை நண்பர்கள் அனைவரும் முருகன் கோவிலுக்கு அருகில் ஒருங்கிணைந்திருந்தனர். பின்னர் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து மலைமீதுள்ள காசி விசுவநாதர் கோவில் நோக்கி சென்றோம். மலைமீது ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. செல்லும் வழி முழுவதும் இரு பக்கங்களிலும் மரங்கள் சூழ்ந்து காணப்பட்டது. கூடவே குரங்குகளும் மரங்களில் விளையாடிக் கொண்டிருந்தன. மலைமீது பாதி தூரம் கடந்த பிறகு பெரிய சமதளமான பகுதி காணப்படுகிறது. குழுவினர் அனைவரும் சிறிது நேர் ஓய்வு எடுத்தனர். குழுவினர் இணைந்த புகைப்படம் ஒன்று மலைகளோடு இணைந்து எடுக்கப்பட்டது.
விழாக் காலங்களில் சிக்கந்தர் சுல்தான் பள்ளிவாசலுக்கு வரும் பக்தர்களின் தங்கும் இடமாக இந்த சமதளமான பகுதி பயன்படுகிறது. இவ்விடத்தில் இருந்து ஒரு புறம் மலைமீது உள்ள சிக்கந்தர் சுல்தான் பள்ளிவாசலுக்குச் செல்ல தனிப் பாதையும், வேறொரு மலைப் பாதை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல என இருபாதைகள் உள்ளன. நண்பர்கள் அனைவரும் காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதைவழியில் உள்ள படிகள் வழியாகச் சென்றோம். குரங்குகளின் சேட்டை வழியெங்கும் நிரம்பி வழிந்தது. செல்லும் வழியில் நிறைய படிகளைக் கடக்க வேண்டிருந்தது. ஒரு வழியாக கோவில் அமைந்துள்ள இடம் வந்து சேர்ந்தோம். 

கோவிலுக்கு செல்லும் வழியில் இடது புறத்தில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருந்தது. வலது புறம் மிகப்பெரிய பாறையும் அதன் கீழே சுனையும் காணப்படுகிறது. இரும்புகம்பிகள் போட்டு வேலி அமைத்திருக்கிறார்கள். சுனையின் உள்ள நீர் முழுவதும் நெகிழி பைகளும், குப்பைகளும் நிறைந்திருந்தன. மலையின் உச்சியைக் கூட நெகிழி பைகள் அடைந்துவிட்டன. பாறையின் மீது பார்சுவநாதர் மற்றும் கோமதீஸ்வரர் புடைப்புச் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டிருந்தது. இதனருகில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. பாறையின் முன்னர் அனைவரும் அமர்ந்தோம்.    
வந்திருந்த நண்பர்கள் அனைவரையும் பசுமை நடையின் நிறுவனர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். காசி விசுவநாதர் கோயிலுக்கு வருவதற்கு மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக  வருவதை விட, கீழேயுள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு அருகில் செல்லும் பள்ளிவாசலுக்கு வரும் மலைப்பாதையே பாதுகாப்பானது. தினமும் பள்ளிவாசலுக்கும், கோயிலுக்கும் வருபவர்கள் இப்பாதையை உபயோகிப்பதால் நமக்கும் பாதுகாப்பு எனக் கூறினார். மேலும், இம்மலைக்கு நாம் அனைவரும் அடிக்கடி குடும்பத்தோடும், நண்பர்களோடும் வந்து சென்றால் இந்த இடத்தின் பழமை பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
அவரைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா திருப்பரங்குன்றம், சமணம் மற்றும் கல்வெட்டுகள் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார். பாறையில் காணப்படும் சிற்பங்கள் கி.பி 8 - 9 ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. பார்சுவநாதர் மகாவீரருக்கு முந்தையவர். 23வது தீர்த்தங்கரர். சமணப் புராணக்கதையொன்றை இங்கு சிற்பமாக வடித்திருக்கிறார்கள். ஐந்துதலை நாகத்தை குடையாகக் கொண்டுள்ள பார்சுவநாதர் மேல் கல்லை போட கமடன் என்ற அசுரன் வருவதாகவும் பின் அவன் திருந்தி அவரை வணங்குவதாகவும் சிலை உள்ளது. கோமதிஸ்வரர் என்றழைக்கப்படும் பாகுபலி சிற்பம் பார்சுவநாதரின் அருகில் உள்ளது. இவருடைய தங்கைகள் பிராமி மற்றும் சுந்தரி அருகில் உள்ளனர். பல்லாண்டுகளாக தவம் இருந்ததால் இவர் காலுக்கடியில் புற்றிருப்பது போலவும் பாம்பு சிலைகளும் உள்ளது.
பின்னர் அனைவரும் காசிவிசுவநாதர் கோயிலுக்கு சென்றோம். கோவிலின் பின்புறமுள்ள மச்சமுனி சன்னதியோடு உள்ள சுனையில் தமிழ்பிராமிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் இச்சுனையில் தற்போது நீர் லேசாக வற்றி குறைந்திருப்பதால் சுனைக்கு உள்ளே உள்ள திண்டு ஒன்றில் உள்ள தமிழிக் கல்வெட்டு வெளியில் தெரிந்துள்ளது. இதனை சென்ற மாதம் தோல்லியல்த் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கல்வெட்டை சாந்தலிங்கம் அய்யா படித்துக் காட்டினார்.
முதல் வரியில் ’மூ நா க ர’ என்னும் நான்கு வார்த்தைகளும், கீழே ’மூ ச க தி’ என்ற நான்கு வார்த்தைகளும் காணப்படுகிறது. இதில் காணப்படும் முதல் வரியானது, மூநகரான மதுரையைக் குறிக்கின்றது.. இரண்டாவது வரியிலுள்ள மூசகதி என்னும் வார்த்தை ’யக்சி’ எனும் சமண இயக்கி ஒருவரையும், மோட்சகதி எனும் மற்றொருவரையும், மூசக்தி என்ற இன்னொருவரையும் குறிக்கின்றது. முதல் வரிக்கு அருகில் சூலம் போன்ற குறியீடு ஒன்று உள்ளதை கவனிக்கவும். 

குழுவினர் அனைவரும் கல்வெட்டை புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மலையிலிருந்து திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மலைமீது இருந்து பார்க்கும் போது, விமானத்திலிருந்து பார்ப்பது போல் இருந்தது. வீடுகள் அனைத்தும் தீப்பெட்டி அளவிற்கு தெரிந்தது. தூரத்தில் தொடர்வண்டி நிலையம் தெரிந்தது. தொடர்வண்டி செல்வது ரயில் பூச்சி செல்வது போலவே இருந்தது. அனைத்தையும் சிறிது நேரம் கண்டு ரசித்துவிட்டு மலையிலிருந்து கீழிறங்கினோம்.
மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோயிலின் பின்புறம் சுனை ஒன்றுள்ளது. சுனையில் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால், குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. சுனையை ஒட்டிய பாறையில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி ஆகியோரின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. மகாவீரர் முக்குடையின் கீழ் அர்த்தபரியங்க ஆசனத்தில் அமர்ந்திருக்க, அருகில் இரண்டு பக்கமும் இயக்கர்கள் நிற்க, மேலே இரண்டு தேவலோக மாந்தர்கள் பறந்தபடி உள்ளனர். இதன் இடது பக்கத்தில் இச்சிற்பத்தை செதுக்கியவரின் பெயர் வட்டெழுத்துக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா படித்துக் கூறினார்.
’ ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுத் தி ருக்குறண்டி அந ந்த வீர்யப்பணி ‘
இக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ள செய்தி. இது கி.பி 9-10 நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு. இதன் பொருள் ஆவியூர் அருகிலுள்ள குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சார்ந்த சமணப்பற்றாளர் ஒருவர் மகாவீரர் திருமேனியை செய்து கொடுத்திருப்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. குரண்டி திருக்காட்டாம் பள்ளி முன்பு பெரிய சமணப் பள்ளியாகயிருந்தது. இன்று அதன் சுவடே இல்லாமல் மறைந்துவிட்டது. சமணமலை, முத்துப்பட்டியிலும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் சிலை வடித்து கொடுத்திருப்பதை அங்குள்ள கல்வெட்டு வாயிலாக அறியலாம். 
மகாவீரர் அருகிலுள்ள ஐந்துதலை நாகத்துடன் பார்சுவநாதர் சிற்பம் உள்ளது. தரணேந்திரன் என்ற இயக்கன், பத்மாவதி இயக்கி சிற்பங்களும், கமடன் என்ற அசுரனின் சிலையும் இதனுடன் உள்ளது. இவ்வுருவத்தை செய்தளித்தவரின் பெயரும் அருகிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
’ ஸ்வஸ்தி ஸ்ரீ சி விகை ஏறின படையர் நீ(ல)னா (இ)ன இளந்தம்ம டிகள் மாணாக்கன் வாணன் பலதேவன் செவ்விச்ச இப்பிர தி(மை) ‘
இக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ள செய்தி. இதன் பொருள், இளந்தம்மடிகளின் மாணவன் வாணன் பலதேவன் இதை செய்திருக்கிறான். மாணாக்கன், பள்ளி என்ற சொற்கள் சமணத்தை சார்ந்தவை என்று நாமறியலாம். மூன்றாவதாக பாகுபலியின் உருவம் உள்ளது. கி.பி 9-10 நூற்றாண்டுகளில் சமணம் இங்கு மிகவும் செல்வாக்கோடு திகழ்ந்தது என்பதற்கு இவை சான்றுகளாகும். சமணமுனிவர்களின் சிலையிருக்கும் பாறையிலுள்ள சிற்பங்களுக்கு அருகிலேயே நாயக்கர் கால கல்வெட்டு ஒன்று உள்ளது. அனைத்தையும் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டேன்.
பின்னர் அருகிலுள்ள பழனியாண்டவர் கோயிலில் நண்பர்கள் அனைவருக்கும் பசுமை நடைக் குழுவினர் காலைச் சிற்றுண்டியை வழங்கினர். செவிக்கு வரலாற்றுச் செய்தியையும், வயிற்றுக்கு சிற்றுண்டியையும் வழங்கிய பசுமை நடைக் குழுவினருக்கு நன்றி கூறி நண்பர்கள் அனைவரும் ஊர் திரும்பினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக