24 செப்., 2013

திருவாதவூர் ஓவா மலையும் ஓயாத மனமும்...

மதுரைமாட்டுத்தாவணி என்ற பெயர்ப் பலகையோடு பேருந்து நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரமென்பதால் கூட்டம் ஒன்றும் இல்லை. காற்று கிடைக்கும் என்பதால், படியை ஒட்டிய இருக்கையில் ஒற்றையாளாய் ஒட்டிக் கொண்டேன். பேருந்து மெல்ல நகர்ந்தது. பயணம் துவங்கிய சில வினாடிகளில் நகர எல்லையைவிட்டு புறநகர் சுற்றுச்சாலையில் பேருந்து பாய்ந்து கொண்டிருந்தது, வேங்கையை போல. வெளியே செந்நிறத்தோடு காட்சி தந்துகொண்டிருந்தது அதிகாலை ஆகாயம். நாசி வழியாக ஈரப்பதம் நிறைந்த மெல்லிய காற்று மூச்சுக் குழலுக்குள் மென்மையாக சென்று கொண்டிருந்தது. முகமெல்லாம் சில்லென்று ஆகியது. நகர வாழ்க்கையில் வெயில்பட்டு வறண்ட முகத்தையும் தேகத்தையும் சில் காற்று முழுமையாய் அப்பிக் கொண்டிருந்தது.

முக்கால் மணி நேரத்தில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். கைக்கடிகாரம் நேரம் 6.15 காட்டிக் கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தின் எதிரே நண்பர்கள் பலர் குழுவாக நின்று கொண்டிருந்தனர். மெல்ல நடந்து சென்று அவர்களோடு ஐக்கியமானேன், அன்றைய மதுரை - திருவாதவூர் நோக்கிய பசுமை நடை’ பயணத்திற்க்காக. சிறிது நேரம் அனைவரோடும் பேசிக்கொண்டிருக்கையில் மற்ற நண்பர்களும் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அனைவருமாக பசுமைநடை குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் திருவாதவூர் நோக்கி பயணித்தோம். சில நண்பர்கள் தங்களது மகிழுந்துகளில் வந்து கொண்டிருந்தனர். இம்முறை எங்களோடு மதுரை எம்..வி.எம் பள்ளி மாணவர்கள் 20 பேரும் ஆசிரியர்கள் 3 பேரும் அவர்களது பள்ளி வாகனத்தில் எங்களோடு சேர்ந்து வந்தனர்.

திருவாதவூர் மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், மேலூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது, மதுரைக்கு அருகே உள்ள யானைமலை அமைந்துள்ள ஒத்தக்கடையிலிருந்து திருவாதவூர் செல்லும் சாலையில் திருமோகூர் என்னும் சிற்றூரை அடுத்து திருவாதவூர் உள்ளது. பேருந்தில் செல்லும் பொழுது இடையங்குடி என்னும் இடத்தில் சாலையோரங்களில் மயில்கள் அதிகமாக தென்பட்டன.  இவ்வூரில் பல சமய தத்துவவாதிகள் வாதம் புரிந்து இருந்ததால் வாதவூர் எனப் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப் பெருமைகள், பெரும் புலவர் கபிலர் மற்றும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய இருவரும் பிறந்த ஊர். திருவாதவூரர் என்று மாணிக்க வாசகர் அழைக்கப்படுகிறார்.

திருவாதவூருக்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னதாகவே சாலையின் வலதுபுறத்தில் ஓவாமலை எனப்படும் பஞ்சபாண்டவர் மலைக்கு  செல்லும் வழி உள்ளது. வாகனங்களை எல்லாம் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து அனைவரும் மலையை நோக்கி நடந்து சென்றோம். வழியில் மிக அழகான வடிவத்தில் ஒரு சிறுகுன்று காட்சி தந்தது. ஐந்து விரல்களால் நம்மை ஆசிர்வதிக்கும் வகையில் அதன் தோற்றம் அமைந்திருந்தது. சிறுகுன்றை ரசித்துக் கொண்டே சென்றோம். கதிரவனின் காலை வெப்பம் ஆளை தின்றது. கதிரவனின் கதிர் ஒளியிலிருந்து மறைந்தே வாழ்ந்தவர்கள் அனைவரும் கதிரவனின் சாட்டையடியை அனுபவித்து கொண்டே சென்றோம்.

மலையை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் வழியில் இருபுறமும் மலைகளிலிருந்து வெட்டப்பட்ட சிறு பாறைகள், கற்குவியல்கள், கிரானைட் கற்கள் என ’மலை’ பல உருவங்களில் சிதைந்து காட்சியளித்தது. கதிரவனின் கோபத்திற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பேர்க்க வேண்டியவர்களாய் உள்ளோம் என்பதை, அந்த வெட்டப்பட்ட மலையின் சிதைந்த காட்சிகள் அனைவருக்கும் புரிய வைத்திருக்கும். இயற்கை என்னும் வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடும் அளவிற்கு அங்கு இயற்கை அழிக்கப்பட்டிருந்தது.

பூமித்தாய் தான் நிர்கதியற்றவள் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுடைய காட்சி காண்போரின் இதயத்தை அவளின் நிலையை போலவே வெட்டி எடுத்துக் கொண்டிருந்தது. இவ்வளுக்கு மத்தியிலும் அங்கு ஒரு மலை மட்டும் உயிருடன் நின்று கொண்டிருந்தது தனியாக. அது எவ்வாறு சாத்தியம்? என்ற கேள்வியோடு அவ்விடத்திற்கு சென்றோம். 

சுமார் 2200 (கி.மு 2) ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு தமிழி (பிராமி) எழுத்துக்களை தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த மலையின் பெயர் ஓவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு வாழ்ந்துவரும் மக்களால் அழைக்கப்படுகிறது. 1966ல் இங்குள்ள கல்வெட்டுகளை ஐராவதம் மகாதேவன் கண்டறிந்தார். தமிழக அரசின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் இம்மலை உள்ளது.

மலையின் மேல் குகை போன்ற அமைப்பு சுமார் 50 அடி உயரத்தில் உள்ளது. அங்கு செல்வதற்கு வசதியாக தொல்லியல் துறையினரால் படிகள் வெட்டப்பட்டு கைப்பிடிகள் அமைக்கபட்டிருந்தன. மலைமீது ஏறுபவர்களுக்கு இந்த கைபிடிகளும், படிகளும் மிகவும் உதவியாயிருந்து. மலையிலுள்ள குகைத்தளத்தில் சுமார் 10 பேர் தங்கும் அளவுடைய கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. குகையின் மேல்புறத்தில் (நெற்றியில்) இரண்டு பிராமி கல்வெட்டுகள் உள்ளன.  ’பாங்காட அர்இதன் கொட்டுபிதோன் என்னும் முதல் கல்வெட்டு குகையின் புருவத்தில் நீர்வடி விளிம்பின் மேல் பகுதியில் உள்ளது. மற்றொன்று உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்’ என்ற கல்வெட்டு கீழுமாக வெட்டப்பட்டுள்ளது.பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்

பாங்காடு என்ற ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத் தளம் குடைவிக்கப்பட்டது என்பது இதன் பொருள். பாங்காட என்பதை பங்காட என வாசித்தால்ப’ வுக்கும்ங’ வுக்கும் இடையில் ஓர் எழுத்து விடுபட வாய்ப்புள்ளது. அதில் என்னும் எழுத்தைச் சேர்த்தால்பனங்காடுஎன்று வரும். திருவாதவூருக்கு அருகில் உள்ள பனங்காடி என்னும் ஊரை இது குறித்திருக்கலாம் எனத் தொல்லியல் துறையினரால் கருதப்படுகிறது.

இரண்டாவது கல்வெட்டு குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் கீழ்பகுதியில் உள்ளது.

’ உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன் ‘

பரசு என்ற உபாசகரால் இந்த உறைவிடம் அமைக்கப்பட்டது என்று பொருள். உபசன் என்ற சொல்லுக்கு உபாத்யாயன், சமைய ஆசிரியர் என்ற பொருள்கள் உண்டு. கொங்கர் புளியங்குளம், கீழவளவு என்ற ஊரிலுள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டிலும் இச்சொல் வந்துள்ளது.

மலையில் உள்ள கல்வெட்டுகளைப் பற்றிய தகவல்களை தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் விளக்கினார். நண்பர்கள் வரலாற்று தகவல்களுடன் தங்களையும் இணைத்து கொண்டு நிழற்படம் எடுத்துக்கொண்டனர்.


பின் அங்கிருந்து திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவிலுக்கு பசுமை நடை குழுவினர் அனைவரும் சென்றோம். திருமறைநாதர் கோவில் மிகப்பழமையான சிவன் கோவில். கோவில் என்றாலே சிற்பங்களின் அணிவகுப்புக்கு குறைவிருக்காது. இங்கும் அது மெய்பட்டதுகோவில் கோட்டையால் அரண் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே கோவிலைச் சுற்றியுள்ள வெளிப்பிராகரத்தில் நண்பர்கள் அனைவரும் அமர்ந்தோம்.

பசுமை நடையின் கடந்த 25 பயணங்களுக்கும் உறுதுணையாக இருந்த தொல்லியல் அறிஞர் ஐயா சாந்தலிங்கம் அவர்களை  பசுமை நடையின் நிறுவனர் .முத்துகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். புகைப்பட கலைஞர் ராஜன்னா எடுத்த சாந்தலிங்கம் அய்யாவின் இரு நிழற்படங்களில் ஒன்றை மதுரை புத்தகத் தாத்தா என்றழைக்கப்படும் முருகேசன்’ அய்யாவும், மற்றொன்றை சமணர்களைப் பற்றிய தொல்லியல் ஆய்வு செய்து வரும்ஜெயஸ்ரீ’ அவர்களால் வழங்கப்பட்டது.

மற்றொரு நிகழ்வாக, பசுமைநடையின் 25வது விருட்சத் திருவிழாவில் நடைபெற்ற நிகழ்வை ஓவியர் ரவி அற்புதமாக வரைந்து பசுமை நடைக்கு நினைவு பரிசாக வழங்கினார். அதை ஓவியர் பாபு பெற்றுக்கொண்டார். அனைத்து நிகழ்வுகளும் இனிதாய் நடைபெற்று முடிய, அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. அறிவுப்பசிக்கும், செவிப்பசிக்கும் நிறைய உணவு கிடைத்ததோடு சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள் கண்களில் ஓடிக்கொண்டிருக்க, அனைவரையும் மாட்டுத் தாவணியில் இறக்கிவிட்டது பசுமை நடையினரின் பேருந்து. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு நீங்காது விடைபெற்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக