22 மார்., 2014

நீரைத் தேடும் வேர்களாய்... குழாய்கள் !

ட்ர்ர்ர ட்ட்ர்ர் ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஷ்ஷ்ஷ்..ட்ர்ர்ர்... என்னடா இது ஒன்னுமே புரியலேன்னு பார்கிறீங்களா ????
ஆம், கடந்த மூன்று நாட்களாய் இரவு முழுவதும் தூக்கத்தை கெடுத்து, தொடர்ந்து பகல் முழுவதும் விடாமல் என் காதில் விழுந்த ஆழ்குழாய் இடும் இயந்திர (போர்வெல்) ” சத்தத்தின் வெளிப்பாடு தான் இந்த எழுத்துக்கள். எங்கள் தெரு மட்டுமில்லாமல் சுற்றிலும் உள்ள எல்லா இடங்களிலும் 'நீரின் மட்டம்' உறிஞ்சும் மோட்டார் மற்றும் குழாய்களை ஏமாற்றி கொண்டே இருந்திருக்கிறது. அனைவரும் 400, 500, 600 அடி ஆழத்தில் நீரை ஒருவழியாக கண்டு பிடித்திருந்தனர் என்ற செய்தி நம் காதுகளை எட்டியது.
மூன்று நாட்களுக்கு பிறகு...
மூன்று நாட்களுக்கு பிறகு, நிம்மதியாக ஒரு வழியாக தூங்கி எழுந்தேன். தேநீரை அருந்திக் கொண்டே அன்றைய செய்திதாளைப் புறட்டினேன். சில பக்கங்களைத் தாண்டிய பிறகு ஓரிடத்தில் இன்று 'மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்' என்ற செய்தி கண்களில் பட்டது. அச்செய்தி முழுவதையும் வாசித்து முடித்துவிட்டு, சிந்தனையை இரண்டு நாட்களுக்கு முன் திருப்பினேன். ம்ம்ம்... மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம், மார்ச் 21 உலக காடுகள் தினம் என சிந்தனையில் வந்து சென்றது. அடப்பாவமே... இது என்ன தொடர்ச்சியாக இப்படி பாதுகாப்பு தினங்களின் அணிவகுப்பு. இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் நாம் செய்த, செய்து கொண்டிருக்கும் எதிர்வினை செயல்கள் என் நினைவுகளில் சலசலத்தது.
என்ன செய்ய முடியும் நம்மால் ? இந்த நவீன உலகில் இன்று. மாற்றமுடியாத பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டதன் விளைவு, இந்த பாதுகாப்பு தினங்களை நாம் இன்று நினைவு கூற வேண்டியுள்ள அவசியத்தில் உள்ளோம். நீரின் தேவையை அதிகரித்து, பூமியில் இருந்து நீரை உறிஞ்சி சேமிக்கின்றோம். ஆனால், நாம் உபயோக்கித்து முடித்த நீரை மீண்டும் பூமிக்கு அனுப்பாமல் கழிவுநீர் கால்வாய்களிலும், கழிவுநீர் ஓடைகளிலும் கலக்குமாறு செய்துவிடுகிறோம். காரணம் அனைத்து குடியிருப்புகளும் மனையின் அனைத்து இடம் முழுவதையும் வீடுகளாய் ஆக்கிரமித்து, நிறைத்து கொண்டு எழுப்பியுள்ளன. மரங்கள் செடிகள், புழக்கடை, போன்ற அமைப்புகளை அமைக்க விரும்பினாலும் கூட மனையை வாங்க முடியாத அளவு மனையின் விலை உயர்ந்துள்ளது.
நகரங்களிலும், நகரத்திற்கு அருகே உள்ள தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான நீரை 1500, 2000 அடி ஆழம் ஆழ்துளை குழாய்கள் அமைத்து நீரை பெறுகின்றன. இதனால், நகரங்களில் குடியிருப்பு பகுதியில் நீர்மட்டம் குறைகிறது. காடுகளை அழித்து தொழிற்ச்சாலைகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் உருவாக்கப்படுகின்றன. மரங்களின் வளர்ச்சி குறைந்து மழைநீரும் குறைகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் இன்று மரங்களின் வளர்ப்பு விகிதம் குறைந்துள்ளது.
சாலைகளின் விரிவாக்கத்திற்காக, ரயிலின் மின்சார கம்பிகள் மற்றும் நகரங்களில் பல பகுதிகளில் மின்சார கம்பிகளின் பாதுகாப்பினை கருதி மரங்கள் அதிகமாக வெட்டபட்டுள்ளன. இதனால், பூமியின் வெப்பநிலை உயர்ந்து நீரின் மட்டம் குறைகிறது. இந்த செய்திகளெல்லாம் நினைவுகளில் சலசலத்துக் கொண்டிருந்தது. என்ன செய்தால் இந்த நிலையிலிருந்து மீண்டு வரமுடியும் என்று நினைத்து கொண்டே இருக்கும் பொழுது மின்சாரம் போய்விட்டது. தலைக்கு மேலே சுற்றிகொண்டிருந்த காத்தாடியும் நிற்கத் தொடங்கியது.
வெருப்போடு எழுந்து, குளிக்க சென்று குழாயைத் திறந்தால் நீர் வரவில்லை. மோட்டாரை போடாலாமென்றால் மின்சாரம் இல்லை. எல்லோரையும் ஏமாற்றிய நீர் உலக தண்ணீர் தினத்தில் என்னையும் ஏமாற்றியது. மின்சாரம் வரும்வரை மீண்டும் செய்திதாளின் பக்கங்களுக்குள் நுழைந்தேன். 1 மணி நேரம் கழித்து மின்சாரம் வந்தது. மோட்டாரை போட்டு அரை மணி நேரம் ஓடவிட்டு நிறுத்தினேன். மீண்டும் குளிப்பதற்காக குழாயை திறந்தால் நீண்ட பெருமூச்சு சத்தத்துடன் காற்றை நம் கைகளில் நிரப்பியது குழாய்.
மிகுந்த கோபத்தோடு மாடியிலுள்ள தொட்டியை நோக்கிச் சென்றுத்  திறந்து பார்த்தபோது, மோட்டார் நீருக்கு பதில் காற்றை நீர்த்தொட்டி முழுவதும் நிரப்பி வைத்திருந்தது தெரிந்தது. கீழே வந்து அம்மா, அப்பாவிடம் செய்தியை சொன்னேன். அம்மா அய்யோ... இப்ப என்ன செய்ய என புலம்பத் தொடங்கினார்கள். அப்பாவும் நானும் தெரிந்த சில முறைகளில் மோட்டாருடன் போரிட்டு இறுதியில் தோல்வியடைந்தோம். தண்ணீரிடம் ஏமாந்தது மோட்டர் அல்ல நாங்கள் தான் என்பது தெளிவாக தெரிந்தது.
அனைவரின் முகத்திலும் ஒருவித ஏமாற்றம் கலந்த வருத்தம் அப்பியிருந்தது. நான், அப்பாவிடம் சரி இப்பதைக்கு வெளியில போய் எங்கிருந்தாவது தண்ணீக்கு ஏற்பாடு செய்வோம். அப்பறம்... போர்வெல்காரங்கள கூப்பிட்டு ஆழத்தை கொஞ்சம் கூட்டுவோம் என்றேன். அப்பா பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார். என்ன பதில சொல்லாமா  நிக்கிறீங்கனேன். அவர் சொன்னார் நம் போரே (ஆழ்துளை குழாயே) வீட்டுக்குள்ளதான் இருக்கு என்றார். எனக்கு தூக்கி வாறி போட்டுச்சு. தலைல கைய்ய வைச்சிகிட்டு அம்மா அமைதியாக இருந்தார். இப்படி ஒருநிலை வரும்னு நாங்க யாரும் நினைச்சதில்ல. வீடே வறட்சியா இருக்க மாதிரி தெரிந்தது. என்ன செய்யனு யோசிச்சிகிட்டே நாற்காலியில் அமர்ந்தேன்.
முன்னாடி இருந்த மேசையில் செய்திதாள் தன் இரண்டு பக்கங்களையும் இரண்டு கைகள் போல் விரித்து வைத்து இருந்தது. அதில் மார்ச் 22 சர்வதேச தண்ணீர் தினம் என்ற செய்தி என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. செய்திதாள் இரண்டு கைகளையும் (பக்கங்களையும்) விரித்து தண்ணீர் 'இல்லை' என்ற செய்தியைதான் எனக்கு இன்று சொன்னது. அப்பா அலைபேசியில் பிளம்பர் ஒருவரை வரச்சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் பிளம்பர் வந்து சேர்ந்தார். மோட்டார், குழாய் என அனைத்தையும் ஒரு முறை போட்டு பார்த்துவிட்டு சொன்னார். அண்ணே நூல் போட்டு பாப்போம், அப்பதான் தண்ணீ இருக்கா, இல்லை குழாயை கொஞ்சம் கூட்டலாமானு தெரியும்னு சொன்னார். அப்பா சரி என்றார். வேலைக்கு விடுப்பு சொல்லிட்டு அப்பாகூட நானும் உதவியா இருந்தேன். மாலைவரை வேலை நடைபெற்றது. அனைத்து குழாய்களையும் வெளியே எடுத்துவிட்டு நூல் போட்டு பார்த்துவிட்டு, பிளம்பர் சொன்னார்... அண்ணே தண்ணி இல்லணே... ஆழத்தக் கூட்றத தவிர வேறவழியில்லை என்றார்.
ஆனால், எங் போர் வீட்டுக்குள்ள இருக்கே என்றார் அப்பா. வீட்டுக்கு வெளியே வீட்ட ஒட்டி போட்டுருவோம்னே என்றார் பிளம்பர். ஒரு வழியாக ஆழ்குழாய் துளை போடும் இடத்தை முடிவு செய்து முடித்தோம். அன்று இரவு 9 மணிக்கு ஆழ்துளை குழாய் (போர்வெல்) வண்டி எங்கள் தெருவில் வந்து நின்றது. மூன்று நான்கு பேர் பெரிய இரும்பு குழாய்களோடு பிட்டிங் வேலையை துவங்கினர். 10 மணிக்கு குழாயை கீழே இறக்கும் பணியைத் துவக்கினர். அத்தோடு சேர்த்து துவங்கியது  ‘ட்ர்ர்ர் ட்ட்ர்ர் ட்ட்ர்ர் ஷ்ஷ்ஷ்..ட்ர்ர்ர்சத்தம்.
கடந்த சில நாட்களாக இரவு நேரம் எனக்கு எப்படியிருந்ததோ, அதே போல் இன்று எங்கள் தெருவில் இருக்கும் அனைவருக்கும் அமைந்தது டர்டர்ர்ர்ர் இரவு. நான் மற்றும் அப்பா, அம்மா அனைவரும் எத்தனை அடி ஆழத்தில், எப்போது தண்ணீர் வெளியே வரும் என்ற வருத்தம் கலந்த ஆவலோடு காத்திருந்தோம். 
இந்த உலக சர்வதேச தினத்தில் பூமிக்கு கீழே எங்கள் குழாய்கள் தண்ணீரைத் தேடும் வேர்களாய் நீண்......டு சென்று கொண்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக