1 ஜூன், 2014

சுற்றுப்புறச்சூழல் பாதுக்காப்பு நம் கைகளில்...

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமூகத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான அவசியமான ஒன்று. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வே நம்மில் பலரிடம் இல்லை. இன்னும் பலருக்கும் இன்றுதான் (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் என்பதே தெரியாது. சுற்றுபுறச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவதில்லை. மேலும் நம்மைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் இவ்வாறுதான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இதன் விளைவு... சுற்றுச்சூழலை பற்றிய அவசியத்தை அனைவரும் அறிந்துகொள்ளஐக்கிய நாடுகள் அமைப்புஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதியை ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வாக கடைபிடித்து வருகிறது.
இன்றைய சமூகத்தில், அரை குறையாக நாகரீக வளர்ச்சியடைந்த மனிதர்களின் நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனாலும், அதில் சரிசெய்ய வேண்டிய சில தவறுகளை எவரும் நடைமுறைப் படுத்த தயாராக இல்லை. வீட்டைவிட்டு அலுவலகங்களுக்கும் வெளியிடங்களுக்கும் செல்லும் வழியெங்கும் சுற்றுச்சூழலால் பாதிக்கபட்ட இடங்களை தினமும் கடந்து செல்கிறோம். தினமும் பல இடங்களை கடந்து செல்லும் பொழுது, மூக்கை மூடிக்கொண்டும், அவ்விடங்களை கண்டும் காணாமலும் சென்றிருப்போம். இந்நிலைகளுக்கு எல்லாம் யார் காரணம்? நாமே... நாம் மட்டுமே.


நெகிழி (பிளாஸ்டிக்) பைகளும், நெகிழி குப்பிகளும், (பாட்டில்கள்) ஒரு நேரப்பயன்பாட்டு (யூஸ் அண்ட் த்ரோ) நெகிழி மற்றும் காகிதக் குவளைகளும் (கப்ஸ்) சாக்கடைகளை அடைத்துக் கொண்டு நிற்பதை காணதவர்கள் இங்கு எத்தனை பேருண்டு. இவைகளை எல்லாம் பயன்படுத்தாதவர்கள் எத்தனை பேர் உள்ளோம். இவற்றை யெல்லாம் பயன்படுத்தி, சுற்றுச்சூழலையும் கெடுத்து, இதற்கெல்லாம் பலனாக நமக்கு கிடைத்தது எல்லாம் பேர் சொல்ல தெரியாத புதுப்புது நோய்கள்தான்.
அன்றாட நாம் தூக்கி எறியும் குப்பைகள் மழைக்காலங்களில் அடித்து செல்லப்பட்டு நீர்நிலைகளை சேர்ந்துவிடுகின்றன. நகரங்களில் கழிவுநீர் கால்வாய்களில் கிடக்கும் குப்பைகள் மழைக்காலங்களில், அல்லது கழிவுநீரோடு சேர்ந்து ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓடும் சிறு ஆறுகளில் கலந்துவிடுகின்றன. விளைவு குடிநீர் ஆதாரத்திலும் குப்பைகள் கலந்துவிடுகின்றன. பெருவாரியான நீர்நிலைகளின் நிலை இதுதான் இன்று. நல்ல குடிநீர் வேண்டும் என்று கேட்கும் நாம் அந்த குடிநீரை தாங்கி நிற்கும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்த தயங்குவதில்லை.
குப்பைகளை நகரின் ஒதுக்குப் புறத்தில் வைத்து எரிப்பதன் மூலம் அப்பகுதியை சார்ந்து வாழும் பலருக்கு மற்றும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் வருகின்றது. குப்பைகள் எரிப்பது பெருகி வரும் குப்பைகளை அழிப்பதற்காக அல்லது குறைப்பதற்காக நடைபெற்று வருகிறது. ஆனால் நாம் அனைவரும் குப்பைகளின் அளவை பெருக்காமல் சுழற்சி முறைகளில் பல பொருட்களை பயன்படுத்தினால் வீட்டிலேயே குப்பைகளின் அளவை குறைக்க முடியும். இது ஒரு மாற்று வழியே. நம் சுற்றுப்புறத்தை காப்பதில் நம் அனைவரின் பங்கும் உண்டு.
பெருகிவரும் நாகரீக ஓட்டத்தில் அளவுக்கு மீறிய பொருட்களை உபயோகிக்கும் வழக்கம் பெருகி வருகிறது. அழகான நெகிழி பைகளையும், தண்ணீர் மற்றும் குளிர்பான குப்பிகளையும்த் தூக்கி கொண்டு அலைபவர்களை தினமும் சாலைகளில் காணலாம். கார்களிலும், பைக்களிலும் சென்றுவிட்டு மாலையில் நடைபயிற்சி செய்பவர்கள், அருகில் இருக்கும் கடைக்கோ, சந்தைக்கோ செல்ல வாகனத்தைப் பயன்படுத்துவார்கள். நெகிழி பயன்பாடு ஒருபக்கம் என்றால் காற்றில் கார்பனின் பங்கும் பெருகி வருகிறது. குறைந்தபட்சம் சில இடங்களுக்கு நடந்து செல்லலாம் அல்லது மிதிவண்டியை பயன்படுத்தலாம். இதன் மூலம் வாகனங்களின் கார்பன் உற்பத்தியை குறைக்கலாம்.
பத்து வருடங்களுக்கு முன்னால் பயணம் செய்யும் பொழுது நாமெல்லாம் குடிநீரை வீட்டில் இருந்து எடுத்து சென்றிருப்பது அனைவரும் அறிந்தது. இன்று அதனைக் கூட தூக்க முடியாமல் வழிகளில் விற்கும் குடிநீர் பாட்டில்களையும், மூன்று மற்றும் ஐந்து ரூபாய் குடிநீர் பாக்கெட்களையும் வாங்குகிறோம். நீரைக் குடித்துவிட்டு பாட்டில்களையும், பாக்கெட்களையும் எறிந்துவிடுவோம். இதுவும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று. குடிநீரை பணத்திற்கு விற்பதே தவறு என்றால், அதனை நெகிழியில் அடைத்து விற்பது அதைவிட பெரும் தவறு. அதுவும் இந்தியா மாதிரியான வெப்ப பிரதேசங்களில், நெகிழியின் உருகும் தன்மை அதிகம். நெகிழி உருகி, குடிநீரோடு கலப்பதால், கேன்சர்  போன்ற கொடிய நோய்கள் பல உருவாகக்கூடும்.
தேநீர் கடைகளில் உபயோகிக்கப்படும் பேப்பர் கப்ஸ், பிளாஸ்டிக் கப்ஸ் எவையுமே முறையாக குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவது இல்லை. அவை அனைத்தும் அருகில் உள்ள பயனற்ற இடங்களில், சாக்கடை கால்வாய்களில் கொட்டப்படுகின்றன. சாக்கடை கால்வாய்கள் இறுதியாக நம் ஊரில் முன்பு ஓடிக்கொண்டிருந்த ஆற்றில்  (இப்போது சாக்கடை) கலந்துவிடும். இங்கு உருவாகும் கொடிய வைரஸ்களின் தாக்குதல்களால் பெரும்பாலும் பாதிப்படைவோர் இப்பகுதிகளை சுற்றி குடியிருப்பு  வாசிகள்.
நண்பர்களே இனி அனைவரும் நெகிழியில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும், டீ கப்கள்பாட்டிகளில் அடைக்கப்பட குடிநீர், பாக்கெட்களில் அடைக்கபட்ட குடிநீர் என பெருமளவு சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழி பயன்பாட்டைத் தவிர்த்து, நம்முடைய சுகாதாரத்தையும் நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் காக்க முன் வருவோம்.

1 கருத்து:

  1. கோழி கழிவுகள் கொட்டப்படாத கண்மாய்களே இல்லை. நகரத்தின் குப்பைகள் ஒன்று சேர்க்கும் இடங்கள் அனைத்தும் நீர்நிலைகளே நல்ல விழிப்புணர்வு கட்டுரை

    பதிலளிநீக்கு