27 ஜூலை, 2014

மாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...!

உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் (பெருவுடையார் கோவில்). கோவிலின் அமைப்பும் அழகும் மலைக்க வைக்கும் வியப்பை அளித்தது. அப்போதே அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய சோழிஸ்வரர் கோவிலையும் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சமீபத்தில் கிடைத்த வாய்ப்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்தேன்இராஜேந்திர சோழன் கட்டிய சோழீஸ்வரர் கோவிலின் அழகை பார்த்து முடிப்பதற்கே பல மணி நேரம் எடுத்தது. சோழிஸ்வரர் கோவிலின் அழகை மனது நிறையும் அளவு கண்டு ரசித்தேன்பின் அங்கிருந்தவர்களிடம் அருகில் சுற்றிப்பார்பதற்கு வேறேதும் இடங்கள் இருக்கின்றதா என்று கேட்ட பொழுது மாமன்னன் இராஜேந்திர சோழனது மாளிகைப் பகுதி ஒன்று உள்ளது என்றனர். அந்த மாளிகைப் பகுதியை தேடிச் சென்றேன்.

மாளிகையானது அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கபட்டு, தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினர். அதன் தற்போதைய பெயரான மாளிகை மேடு என்று கூறி அதற்கு செல்லும் வழியை கூறினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு மாளிகைமேடு நோக்கி சென்றேன்.

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தெற்கே சுமார் 3 கி.மீ தொலைவில் குருவாலப்பர் கோவில் அமைந்துள்ளது. குருவாலப்பர் கோவில் செல்ல பேருந்து வசதி உள்ளது. பின் அங்கிருந்து சுமார் 2 கி.மீ மேற்கு நோக்கிஉள்கோட்டை’ என்னும் சிற்றூருக்கு செல்லும் சாலையின் வட பகுதியில் அமைந்துள்ளது சோழர்களின் மாளிகைமேடு.

கோவில்களிலேயே தங்களது கட்டிடக் கலையை மிகச் சிறப்பாக நிருபித்த சோழ மன்னர்கள் தாங்கள் வாழ்ந்த அரண்மனை மாளிகைகளின் அழகை எப்படி வடிவமைத்திருப்பார்கள்? என்ற ஆவலோடு செல்லும் வழியில் பார்பவர்களிடம் எல்லார் வழிகேட்டு உறுதிபடுத்தியவாறே மாளிகைமேடு அமைந்துள்ள இடத்தை வந்தடைந்தேன்.

வழியெங்கும் பொட்டல் நிலமாய் வறட்சியாக காட்சி தந்தது. வழியில் கண்ட தொல்லியல்த் துறையின் தகவல் பலகைகளின் நிலைமை மிக மோசமாக இருந்தது. மாளிகை மேட்டிற்கு செல்லும் முன் அங்கு கண்ட காட்சி நம்மை தூக்கி வாறி போட்டது. மாளிகை என்ற வார்த்தையில் உருவாகும் ஒரு எதிர்பார்ப்பை  ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும் வகையில் மாளிகை இருந்த கட்டிடத்தின் அடித்தளப்பகுதி மட்டுமே அங்கே காணக் கிடைத்தது. தொல்லியல்த் துறையின் தகவல் பலகையின் நிலையும் மாளிகைமேட்டின் நிலையும் ஏறத்தாள ஒன்றாகவே இருந்தது.
பெரும் கருங்கற்களைக் கொண்டு உலகின் மிக உயரமான அழகான நேர்த்தியான மற்றும் நிலையான ஒரு கோவிலை இறைவனுக்காக 1000 ஆண்டுகளுக்கு முன்னமே உருவாக்கிய இராஜேந்திர சோழனின் மாளிகையின் அடிப்பகுதியில் நமக்கு காணக் கிடைத்ததெல்லாம் செங்கற்களால் ஆன அடிப்பகுதி மட்டுமே. இவ்விடத்தில் தற்போது சில சுவர்களையே காணமுடிந்தது. சுமார் 30 செண்ட் நிலப்பகுதியில் மாளிகைமேட்டின் அடிப்பகுதி அமைந்துள்ளது.

சில சதுர கருங்கற்கள் எண்கள் குறிக்கப்பட்டு அங்குமிங்குமாக கிடக்கின்றன. சில கருற்கற்கள் சுவர்களின் நடு நடுவே பதித்துவைத்தாற் போல் உள்ளது. காணப்படும் சுவர்களில் செங்கற்கள் மிக நேர்த்தியாக அடுக்கி வைத்துக் கட்டப்பட்டுள்ளன. தற்போதைய செங்கற்களின் அளவைவிட சற்று பெரியதாக காணப்படுகிறது. சில இடங்களில் களிமண் அல்லது சுண்ணாம்பு கலந்த காரையால் செங்கற்களின் மீது பூசப்பட்டுள்ளது. மாளிகைமேடு அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் காட்டுச் செடிகளும் மரங்களும் பரவியிருந்தது. செல்லும் வழியில் சில குடியிருப்புகள் தென்பட்டன.

நான் செல்லும் முன்னரே அங்கு சிலர் மாளிகைமேட்டை பார்வையிட்டு கொண்டிருந்தனர். அவர்கள் இரண்டு கார்களில் வந்திருந்தனர். அவர்களிடம் பேசிய போது தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகக் கூறினர். தங்களது வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு இராஜேந்திர சோழன் கட்டிய சோழீஸ்வரர் கோவிலையும் மாளிகைமேட்டையும்  காட்டுவதற்க்காக வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டேன்.

மாளிகை மேடு என அழைக்கப்படும் இப்பகுதி தமிழக தொல்லியல் துறையினரால் அடையாளம் காணப்பட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டது என்று வந்திருந்தவர்களில் ஒருவர் கூறினார். இவ்விடம் 1980 முதல் 1991 வரை அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போது கண்டெடுக்கப்பட்ட பல அறைகள் போன்ற பகுதிகளில் உள்ள சுவர்களை பெயர்த்து அதிலுள்ள செங்கற்களை பலர் இங்கிருந்து எடுத்துச் சென்று வீடுகட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளதாக கூறினார்.

தற்போது நாம் காண்பதெல்லாம் அவற்றின் மிச்சம் மீதியே என்றார். அவரின் கூற்று மெய்யாகவே தோன்றியது. தற்போதே சில இடங்களில் காணும் மீதமுள்ள செங்கற்கள் அழகாக தெரிகின்றது. எந்தவித பாதுகாப்பும் இல்லாத காரணத்தால் மாளிகைமேட்டின் உட்புறம் பொதிந்துள்ள பொக்கிசம் கயவர்களின் கைவண்ணத்தில் கரைந்து வருகிறது.

மாளிகைமேடு அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் ஒரு தகரத்தால் வேயப்பட்ட இடம் இருந்தது. அங்கு சென்று பொழுது அவ்விடம் சுற்றிலும் இரும்பு கம்பிகளால் (FENCING) போடப்பட்டிருந்தது. உள்ளே கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாளிகைமேட்டின் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட சில கல்வெட்டுக்களும், 40 மேற்ப்பட்ட கற்ச்சிலைகளும் கான்கீரிட் பீடம் அமைக்கப்பட்டு அதன் மேல் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இவ்விடம் அருங்காட்சியகம் என்ற வார்த்தையால் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாதுகாப்பற்ற இடத்தில் சோழர்களின் பொக்கிசங்கள் எடுக்கவே முடியாத அளவும் மிக மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது நம்மை ஆச்சிரியத்தில் தள்ளியது.


இந்த பாதுகாப்பான அருங்காட்சியத்தின் நுழைவாயிலில் இரண்டு சிங்கங்கள் நம்மை  வரவேற்கின்றன. உள்ளே காணப்படும் கற்சிலைகளில் அல்லது சிற்பங்களில் தெய்வங்களின் உருவங்கள் நிறைந்திருந்தன உள்ளே ஜேஸ்டா தேவி, துர்க்கை, தேவி, சாமுண்ட, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, பிராமி, வடிவங்களோடு விநாயகர், பிரம்மா, ஐயனார், பைரவர், முருகன், தச்சனாமூர்த்தி, சிவலிங்கம், நந்தி ஆகிய சிற்பங்களும் பல்வேறு வட்டெழுத்து கல்வெட்டுக்களும் உள்ளன.

பாதுகாப்பாக பூட்டி வைத்திருக்கும் வீடுகள், வங்கிகள், கோவில்கள் இருக்கும் இடங்களிலேயே உள் நுழைந்து சிறப்பாக அள்ளிச் செல்லுவது தற்போது நிலவி வரும் காலச் சூழல். இப்படிப்பட்ட காலச் சூழலில் முறையான எவ்வித பாதுகாப்பும் இல்லாத இப்பகுதிகளில் சிரமப்பட்டு கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுச் சிற்பங்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருப்பது நமது வரலாற்றின் மேல் நாம் கொண்டிருக்கும் மரியாதையை காட்டுகிறது.

மேலும் மாளிகைமேடு பகுதியில் எஞ்சி இருக்கும் சில சுவர்களையும் அதிலுள்ள செங்கற்களையும் இன்னபிற சிறப்பு வாய்ந்த பொக்கிசங்களையும் கண்டிப்பாக பாதுகாத்திட பொது மக்களும் வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர் மற்றும் அறிஞர் பெருமக்களும் முன் வர வேண்டும்.

தென்கிழக்கு ஆசியாவரை தனது அரசை நிறுவி, பல நாடுகளை வென்றெடுத்த ஒரு மாபெரும் தமிழ் சக்கரவர்த்தி, மாமன்னனின் மாளிகையின் நிலை இன்று இவ்வாறு காட்சியளிக்கின்றதுவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடத்தையும், இங்கு கண்டெடுத்த சிற்பங்களையும், பொருட்களையும் அதன் சிறப்பு சற்றும் குறையாமல் பாதுகாத்திட வேண்டியது நம் அனைவரின் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக