16 ஜூன், 2013

திண்டுக்கல் சிற்பக் கோட்டை...

மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக சேலம் பயணம் செய்யும் போதெல்லாம், எப்படியாது ஒரு முறையாவது திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மலைக்கோட்டைகளை பார்த்துவிட வேண்டும் என ஆவல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. இப்படித்தான், நமக்கு அருகில் இருக்கும் பல முக்கிய இடங்களை பார்க்காமலேயே சென்று விடுகிறோம். கடந்த வாரம் நண்பர் ஒருவரின் திருமணம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருமணத்தில் கலந்து கொண்டு மதிய உணவை முடித்தவுடன் நண்பர்களோடு சென்று மலைக்கோட்டையை பார்த்து வந்தேன்.

மலைக்கோட்டையை பார்த்த பிறகு, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இத்தனை நாள் பார்க்காமல் இருந்து இருக்கிறோமே என்ற உணர்வுதான் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி இதர விடுமுறை நாள்களில் பல தொலைதூர சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் நாம்... நமக்கு அருகில் இருக்கும் முக்கிய இடங்களை காணாமல் இருப்பது தான், அருகிலேயே உள்ள ஊர்களின் மேல் நாம் கொண்டுள்ள பற்று.


மலையின் முகப்பில் தொல்லியல் துறையின் அலுவலகம் உள்ளது. இங்கு மலைக்கோடையைக் காண நுழைவுச்சீட்டு எடுக்க வேண்டும். சிறியவர்களுக்கு ரூ 5ம், பெரியவர்களுக்கு ரூ 10ம் வெளிநாட்டவர்களுக்கு ரூ 100 என அறிவிப்பு பலகையில் காணப்பட்டது. பெரியவர்களுக்கான 5 சீட்டுகளை எடுத்துக் கொண்டு கோட்டையை நோக்கி மலைமீது ஏறத்துவங்கினோம். கோட்டை மலையின் மீது உயரத்தில் காணப்பட்டது. கோட்டையைப் பார்க்க சில அடி உயரம் படிகளில் ஏற வேண்டிய நிலை. படிகள் மிக நேர்த்தியாக ஏறிச்செல்வதுற்கு வசதியாக வெட்டப்பட்டு இருந்தது. படிகள் வழியாக செல்லும் வழியில் இளைப்பாற ஆங்காங்கே கற்த்திண்டுகள் தொல்லியல் துறையினரால் அமைக்கப்பட்டிருந்தது. மலையின் மீது ஏறிச்செல்லும் பொழுது இடதுபுறம் கீழே அழகிய தெப்பக்குளம் நீரோடு காணப்பட்டது. மலைகள் மீது செல்லும் பொழுதெல்லாம் கண்ணில்படும் அற்புதக்காட்சி நீர்நிலைகள்.

கோட்டையை நெருங்கிய போது, நம்மை பிரமிப்படையச் செய்யும் விதத்தில் கோட்டையின் கம்பீரமும், அழகும் காத்துக்கொண்டிருந்தது. கருங் கற்களாலும், செங்கல்களாலும் கோட்டையின் சுவர்கள் கட்டப்பட்டிருந்தது. கோட்டையின் சுற்றுச்சுவர்களில்மாடம்போன்ற அமைப்பும், யானை துதிக்கை வழியாக நீர் வெளியேறும் அமைப்பும், ஒளிக்காக இரும்பு பட்டை மற்றும் கண்ணாடியால் சூழப்படும் விளக்கு ஒன்றும் காணப்பட்டது. விளக்கில் கண்ணாடிகள் இல்லாமல் இரும்பு பட்டை மட்டும் காணப்பட்டது. திண்டுக்கல் மலைக்கோட்டை 900 அடி உயரத்துடனும் 2.75 கி.மீ சுற்றளவும் கொண்டது.

கோட்டையின் நுழைவாயிலில் மிகப்பெரிய மரத்தினால் ஆன கதவு இருந்தது. உள்ளே நுழைந்ததும் பசுமையான அழகிய மரம் ஒன்று நம்மை வரவேற்றுக்கொண்டிருந்தது. நம்பமுடியவில்லை இவ்வளவு பசுமையான மரம், அதுவும் இவ்வளவு உயரத்திலா ? என்ற ஆச்சரியத்துடன் கோட்டைக்குள் இருந்த கட்டங்களில் உள்ள கலையை கண்டு ரசித்தோம். பின்னர் அங்கிருந்து இன்னொரு மிகப்பெரிய கதவு வழியாக சென்று, அருகிலுள்ள அடுத்த கட்டிடத்தை அடைந்தோம். மிகப்பெரிய நீண்ட, அடுக்கு அடுக்கான முறைகளில் கட்டபட்டிருந்தது அந்த அறைகள். அவைகள் அறைகள் மட்டுமல்ல அல்ல வெடிபொருட்கள் வைக்கும் இடமாகவும், போரின்போது வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யவதற்காகவும் கட்டப்பட்ட தங்கு அறைகளாகவும் இருந்துள்ளன. மேலும் வீரர்கள் அவசர காலங்களில் தப்பிக்க ஏற்றவாறும் கட்டப்பட்ட்ள்ளது. இந்த இடத்தில் மொத்தம் 48 அறைகள் உள்ளன. இவ்வறைகளில் சில சிறைச்சாலைகளாகவும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

சுவர்களில் இன்றைய தலைமுறை காதலர்களின் பெயர்கள் கரிக்கட்டையாலும், சிவப்பு நிறங்களிலும் எழுதப்பட்டிருந்தது. காதல் சிறையில் அகப்பட்டவர்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். மலையில் ஏறத்துவங்கியதிலிருந்து மலையின் அனைத்து இடங்களிலிலும் நாம் கண்ட இன்னோரு காட்சி காதலர்கள். கோட்டையை முழுவதுமாக கையகப்படுத்தி இருந்தனர். காதல் கோட்டை போன்றது என்பதை கேள்விபட்டிருந்தேன். இன்று அதை உண்மையிலேயே காதல் கோட்டை போன்றதுதான் என்பதற்கு அர்த்தம் அறிந்து கொண்டேன்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு மலையின் மீது இன்னமும் கொஞ்சம் மேலே சென்றால் அங்கும் சில கட்டிடங்கள் காணப்பட்டன. அவற்றில் பல சிதைந்த நிலையில் காணப்பட்டன. தூரத்தில் ஓரிடத்தில் பச்சை பசுமையுடன் புற்ச்செடிகள், கொடிகளோடு குளம் ஒன்று காணப்பட்டது. மலைகாலத்தில் பெய்த மமையால் இது உருவாகி இருக்கலாம். மற்றோரு இடத்தில் பெரிய மரம் ஒன்று நிழல் தந்துகொண்டிருந்தது. அதன் கீழ் மாணவர்கள், இளைஞர்கள் பலரும் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். அருகிலேயே ஒரு சுற்றுச்சுவர் மிக அகலமாகமான சுற்றுடன் கட்டப்பட்டிருந்தது. கோட்டையின் சுவர் முழுவதும் செங்கற்களால் இரண்டு சுற்றுகளாக கட்டப்பட்டிருந்தது. அதில் இரண்டு பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்தன. பீரங்கியைப் பார்த்ததுதும் ஆங்கிலேயர்கள் சிந்தனைகளில் வந்து சென்றனர். திண்டுக்கல் மலைக்கோட்டை மிக முக்கிய இராணுவத் தளமாக செயல்பட்டு வந்துள்ளது.

இந்த கோட்டை மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ண நாயக்கரால் கி.பி. 1605 ஆம் கட்டத் தொடங்கி பின்னர் திருமலை நாயக்கரால் கி.பி 1659ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த நவாப் மன்னர்கள், மராத்தியர்கள், முசுலீம் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இம்மலைக்கோட்டையை கைப்பற்ற போராடியுள்ளனர். பின்னர் ஆங்கிலேயர்களிடம் இருந்து மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகியொர் கைப்பற்றினர். இவர்களது ஆட்சியில் கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். இவ்வாறு இம்மலைக் கோட்டையானது ஒவ்வொருவரின் கைப்பற்றலிற்கு பின்பு பலமாக வலுபடுத்தப்பட்டு பாண்டிய நாட்டுப் பகுதியின் சிறந்த படைத்தளமாக மாறியுள்ளது.

மலையின் உச்சியில் அழகிய கோவில் போன்ற அமைப்பு காணப்பட்டது. உச்சிக்கு செல்ல, படிகள் வெட்டப்பட்டிருந்தது. படிகள் வழியாக செல்லும் பொழுது இடப்புறத்தில் மிகப்பெரிய குளம் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்தது. அரசக் குடும்பத்தினர் நீராடுவதற்காக அமைப்பட்டிருக்கலாம் இந்த குளம். ஒருவழியாக மலையின் உச்சியை அடைந்த போது, மிக அற்புதமான வடிவில் கோவில் ஒன்று கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
முதலில் கோவிலின் வெளிச்சுற்று முழுவதையும் கண்டுரசித்து விட்டு, பின் உள்ளே நுழைந்தோம். இக்கோவில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். இக்கோவில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்காக எழுப்பப்பட்ட கோவில். தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடு ஏதும் நடைபெறுவதாக தெரியவில்லை. இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கோவிலின் சுற்று பிராகத்தில் வெளியே தனியே கிடக்கிறது.

உள்ளே கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும், கோவிலின் அடிமட்ட மற்றும் மேற்புற அமைப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தின. அதிலும் குறிப்பாக கோவிலின் அடிப்புற கற்களால் வெட்டப்பட்டு அமைக்கபட்ட இடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்றைய விஞ்ஞான நடைமுறையில் கூட இதுபோன்ற கட்டிடங்களை உருவாக்குவது என்பது சற்று கடினமே. இயந்திரத்தினால் வெட்டிச் செய்யப்பட்டது போன்றதொரு துல்லியமான வெட்டுகள் நம்ப முடியாத ஆச்சரியத்தை உண்டாக்கியது. கோவிலின் சிற்பக்கலை வடிவங்களையும் மலைக்கு மேல் கண்ட அற்புதக் கட்டிடக்கலை காட்சிகளையும், கோட்டையின் அழகிய அமைப்பையும் நிழற்ப்படங்களாக எடுத்துக் கொண்டேன்.

நீண்ட நாள் கனவாக இருந்த திண்டுக்கல் மலைக் கோட்டையையும் அதனுள் அமைந்துள்ள அற்புத கட்டிடக்கலைகளையும் கண்டுரசித்த மகிழ்ச்சியில் சிறிது நேரம் அங்கிருந்த சிறு மண்டபத்தில் இளைப்பாறிவிட்டு மலையிலிருந்து கீழிறிங்கினோம். கண்டிப்பாக முடிந்தவர்கள் ஒருமுறை திண்டுக்கல் வந்தால் மலைக்கோட்டையை கண்டுவிட்டுச் செல்லுங்கள். அப்போது புரியும் நான் கூறியவைகள் எல்லாம் உண்மையா இல்லையா என்று. சரி எனக்கும் அடுத்து பார்க்கவேண்டிய இன்னொரு மலைக்கோட்டை உள்ளது. அது நாமக்கல் மலைக்கோட்டை. விரைவில் நாமக்கல் மலைக்கோட்டை பற்றிய தகவல்களுடன் உங்களிடம் மீண்டும் வருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக