29 ஜூன், 2013

கருங்காலக்குடியும் கற்கால பாறை ஓவியங்களும்...

மேலூரிலிருந்து திருச்சி செல்லும் நான்கு வழிசாலையின் வலதுபுறம் கருங்காலக்குடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. கருங்காலக்குடிச் சிற்றூரின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது பஞ்ச பாண்டவர் மலை (அ) குன்று. இம்மலையில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும், வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகின்றன. 

இயற்கையாகவே பஞ்ச பாண்டவர் மலையின் கீழ்பகுதி குகை போன்று அமைப் காணப்படுகின்றது. குகையின் கீழ்த் தளத்தில் சுமார் 30 கற்படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. குகையின் முகப்பில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு அதன்கீழ் தமிழ்பிராமிக் கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. குகைத் தளத்திற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. இக்குகைத் தளத்தின் மேல்புறம் அமைந்துள்ள மலைப் பாறையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியங்களைக் காண ....

ஓவியங்களைக் காண குகைத் தளத்தின் வலது புறமாக மேலே உள்ள மலைக்குச் செல்ல படிகள் தொல்லியல் துறையினரால் மலையில் வெட்டப்பட்டுள்ளது. 

படிகள் வழியாக குன்றின் மீது ஏறிச் சென்று சிறிது தூரம் சென்றால் அங்கு மிகப்பெரிய கற்பாறை உள்ளது. பாறையின் அடிபாகத்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடிகளால் வரையப்பட்டகற்கால’ ஓவியங்களை காணலாம். இதன் மூலம் இவ்விடத்தில் சமணர்கள் வருகைக்கு முன்பே இங்கு கற்கால அல்லது தொல் பழங்குடி மக்கள் வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது. இது போன்ற தொல்பழக்குடிகள் வாழ்ந்த இடங்களுக்கு முதலில் சென்று சமண துறவிகள் தங்களது சமயப் பிரச்சாரங்களையும், கல்வி, மருத்துவம் போன்றவற்றையும் செய்துள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.


  
இங்கு வாழ்ந்து வந்துள்ள பழங்குடிகள் அனைவரும் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்துள்ளனர் என்பதை, பாறை ஓவியங்கள் மூலம் அறிய முடிகிறது. மிருகத்தின் மேல் அமர்ந்து மனிதன் செல்லுவது போன்ற ஓவியம், வேல் கம்பை பிடித்துள்ள மனித ஓவியம், மிருகங்களின் ஓவியங்கள் போன்றவை வெள்ளை நிறத்திலும், காவி நிறத்தில் சில ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது.  இந்த ஓவியங்கள் கூறும் கருத்துக்களின் அருமை பலருக்கும் புரியாத காரணங்களினால், அதன் அருகிலேயெ பல கிறுக்கல்களை காணமுடிகிறது. சில இடங்களில் வெள்ளை நிற குறியீடுகள் மற்றும் ஓவியங்கள் மங்கலாக தெரிகின்றன. அருகிலேயே நம்மவர்கள் வெள்ளை நிறத்தில் தங்களது பெயர்களையும் எழுதியுள்ளதால், குறியீடுகள் போன்று தெரிவது கற்கால மனிதர்களுடையதா அல்லது இக்கால மக்களின் வேலையா எனப் புரியவில்லை.

வெளிநாடுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ள இது போன்ற பல தொன்மையான ஓவியங்கள் அரசாலும், மக்களாலும் பாதுகாக்கபட்டு வருகிறதுநம்மவர்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். பிரான்ஸ் நாட்டில் உள்ள அல்தாமீரா-சாவேஸ் குகை ஓவியங்களை மிகப் பழமையானதாகச் சொல்லி அவற்றை யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாத்து வருகிறார்கள். நாம் இப்போதுதான் இதுபோன்ற துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம். வரும் நாட்களில் நாமும் நம் மூதாதையர்களின் வாழ்வியலை பாதுகாத்து, இதனை நம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று ஓவியர் பாபுவும், எழுத்தாளர் .முத்துகிருஷ்ணனும் கூறினர்.

பாறை ஓவியங்களை எல்லாம் பார்த்துவிட்டு, அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்து சுற்றியுள்ள இடங்களையும், மலைகளையும் ரசிக்க முடிந்தது. பல வழிவங்களில் பாறைகள் நின்று கொண்டிருந்தன. இலவசமான இதமான காற்றின் தழுவலில் சற்று நேரம் உலகயே மறக்க முடிந்தது. சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மலையை விட்டு வெளியேறி, அருகிலிருந்த ஊரணி பகுதியில் பசுமை நடை குழுவினர் அளித்த காலை சிற்றுண்டியை ருசித்தோம்ஊரணியைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு, ஊரணி மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 


ஊரில் உள்ள சிறுவர்களுக்கு எங்களைப் பார்த்ததில் என்னவொரு ஆனந்தம். நிழற்படங்களுக்கு அவர்கள் அளித்த மகிழ்ச்சிகரமான காட்சிகள் நாம் நகரத்தில் எவற்றையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தியது. குழந்தைகளின் மகிழ்ச்சி நம்மை அவர்களிடம் பொறாமை கொள்ள செய்தது. நிழற்படங்களைப் பாருங்கள் உங்களுக்கு புரியும் மகிழ்ச்சி எது என்று. இது போன்ற ஒரு சந்திப்பிற்கு வாய்ப்பு அளித்த பசுமை நடையினருக்கு நாமும் அக்குழந்தைகளே போன்றே நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம்.

பயணத்தை முடித்து கொண்டு பேருந்தில் திரும்பி கொண்டிருக்கும் பொழுது குழந்தைகளின் விளையாட்டும், கை அசைத்து வழியனுப்பிய காட்சிகளும் மனத்திரையில் வந்தோடியது. பசுமை என்பது இயற்கையில் மட்டும் இல்லை உள்ளங்களிலும் உள்ளது என்பதை அக்குழந்தைகள் மூலம்  தெரிந்துகொள்ள முடிந்தது.
   
பஞ்ச பாண்டவர் மலைக் குகைத் தளத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகளை பற்றி தெரிந்துகொள்ள  கீழே உள்ள் சுட்டியை அழுத்தவும் 

படிக்க: கருங்காலக்குடியும் தமிழ் பிராமி கல்வெட்டுகளும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக