27 ஜூலை, 2013

அரிட்டாபட்டியில் குடைவரை கோயில்...

மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அரிட்டாபட்டி சிற்றூர். இங்கு முற்கால பாண்டியர் காலத்து குடைவரையும், 2000 வருட பழமையான தமிழிக் கல்வெட்டும் உள்ளது. இதனை காண்பதற்காக பசுமைநடைக் குழுவோடு இணைந்து சென்ற வாரம் ஞாயிறு காலை சென்று வந்தேன். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் குழுவினர் சந்திக்கும் இடமாக கூறப்பட்டு இருந்தது. காலை 6.30 மணியளவில் அங்கு சென்றேன். குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் அரிட்டாபட்டி நோக்கிச் சென்றோம். சில நண்பர்கள் தங்களுடைய சிற்றுந்துகளில் எங்களோடு வந்தனர்.
காலைவேளை இளங்காற்றோடு பயணம் அமைந்தது. முக்கால் மணி நேர பயணத்தில் பேருந்து அரிட்டாபட்டிச் சிற்றுரை கடந்து மலை அமைந்திருந்த பகுதிக்கு சென்றது. மலைக்கு முன்னதாக பெரிய கண்மாய் போன்ற இடம் நீரில்லாமல் காணப்பட்டது. இக்கண்மாய்க்கு ஆணைகொண்டான் கண்மாய் என பெயர் என்று நண்பர் சுந்தர் கூறினார். குழுவினர் அனைவரும் கண்மாய் வழியாக மலையை நோக்கி நடந்தோம். மலையின் கீழ்க்பகுதிகளில் தண்ணீர் இருந்தற்கான சுவடுகள் காணப்பட்டது. மலையில் சில உருளை வடிவ பாறைகள் சாய்வான மலைப் பகுதியிலும் விழாமல் நின்றிந்தது. இப்போதும் அரிட்டாபட்டி என்றாலே கீழே உருளாமால் நிற்கும் அந்த அழகிய பாறைகள் தான் என் நினைவிலும் விழாமல் நிற்கிறது. பசுமை நடைக் குழுவினர் வந்திருந்த நண்பர்கள் அனைவரையும் மலைக்கு பின்னால் உள்ள கி.பி 7-8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் குடைவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.



மலையின் பின்புறம் இன்னொரு நீண்ட மலைத் தொடர் காணப்பட்டது. இரண்டு மலைகளுக்கு நடுவிலும் நடந்து சென்றோம். கோவிலின் முகப்பில் தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகையில் இக்குடைவரையை பற்றிய வரலாற்றுச் செய்தி காணப்பட்டது. மலையில் கோவிலானது முழுவதும் குடைந்தே செய்யப்பட்டிருந்தது. குடைவரை முழுவதும் இரும்பு கதவு மற்றும் ’சாலியால்’ பாதுகாக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அமைப்பில்தான் யானைமலையின் பின்புறம் உள்ள லாடன் குடைவரைக் கோவிலும் செய்யப்பட்டிருந்தது. குடைவரைக் கோயில் கருவறையின் மையப் பகுதியில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கமும் உள்ளே உள்ள பாறையில் குடைந்து செய்யப்பட்டது. கருவறையின் வாசலில் வாயிற்காவலர்கள் (துவாரபாலகர்கள்) சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருவறைக்கு வெளியே உள்ள பகுதியில் வலதுபுறம் விநாயகர் சிற்பமும், இடதுபுறம் இலகுலீசர் சிற்பமும் மலையோடு சேர்த்து புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த இலகுலீசர் சிற்பம் தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத சிறப்பு வாய்ந்த சிற்பம் என்பதை அறிவிப்புப் பலகை செய்தி மூலம் அறிந்து கொண்டோம். இதன் மூலம் இலகுலீச பாசுபதம் என்னும் சைவ சமயப் பிரிவு அக்காலத்தில் பாண்டிய நாட்டிலிருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது. இக்குடைவரை கட்டிடக்கலை சிற்ப உருவ அமைப்பை வைத்து கி.பி.7-8ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாமென்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். குடைவரைக் கோவில் முன் பகுதி கான்கீரிட் தளமும், இங்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதியும் செய்து வைக்கப்பட்டிருந்தது.
நண்பர்கள் அனைவரும் குடைவரை முன் தளத்தில் அமர்ந்தோம். பசுமை நடை நிறுவனர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வர்வேற்றுப் பேசினார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெற இருக்கும் பசுமை நடையின் 25வது நடை கிழக்குயில்குடியில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் “விருட்சகத் திருவிழாவாக கொண்டாடப்படுவதற்கான அறிவிப்பை கூறி அனைவரும் குடும்பத்தோடு கலந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார். இம்முறை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வர இயலவில்லை. எனவே அவரைத் தொடர்ந்து பசுமை நடையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுந்தர் (சித்திரவீதிக்காரன்) அரிட்டாபட்டி மலைகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளை வந்திருந்தவர்களுக்கு விளக்கி கூறினார்.  அனவருக்கும் அரிட்டாபட்டி பற்றிய வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய கைப்பிரதி வழங்கப்பட்டது.
அனைவரும் குடைவரையைப் பார்த்துவிட்டு, பின்னர் அங்கிருந்து மலையின் தெற்குபுறத்தில் மலையின் மறுபுறத்தில் (கிழக்குப் பகுதி) அமைந்துள்ள சமணப் படுக்கையைக் காணச் சென்றோம். மீண்டும் அனைவரும் இரண்டு மிகப்பெரிய மலைத் தொடர்களுக்கு நடுவே நடந்து சென்றோம். செல்லும் வழியில் சிறிதும் பெரிதுமாக பாறைகள் பல மலைகளில் காணப்பட்டது. பல பாறைகள் மலைகளில் இருக்கும் அமைப்பை பார்க்கும் பொழுது வியப்புதான் ஏற்பட்டது. ஒரு சிறு குன்று போன்ற பாறை மிது இன்னொரு சிறு பாறை செங்குத்தாக நின்றிருந்தது. இது எப்படு சாத்தியம். இந்த சிறு பாறை எப்படி இந்த இடத்திற்கு வந்திருக்கும். இது போலவே இன்னமு, பல பாறைகளின் அமைப்பை இங்கு கூற முடியாத அளவு அமைந்துள்ளன. நண்பர் சதீஷிடம் வித்தியாசமான உருவங்களில் காணும் அனைத்து பாறைகளையும் நிழற்படம் எடுக்க சொன்னேன். அந்த பாறைகளுக்காகவே தனியாக ஒரு பதிவிடலாம் போலிருந்தது.
குழுவினர் அனைவருக்கும் மலைகளுக்கிடையே பயணித்தது புது அன்னுபவத்தை தந்தது. இது போன்ற இடங்களுக்கு எல்லாம் தனியாக வருவது என்பது அச்சம் தான்.  நண்பர்கள் பலருடன் சேர்ந்து வருவது ஒரு பாதுகாப்பு. மலைத்தொடர்களில் பெரியதும் சிறியதுமாய் பாறைகள் ஒவ்வொன்றும் அழகாக காட்சியளிக்கின்றன. குடைவரை அமைந்துள்ள மலைத்தொடரில் கிழக்குப் பகுதியில் மலையின் மிது இரயில் பெட்டிகள் போன்று ஐந்தாறு பாறைகள் வரிசையாக அமைந்திருந்தது. அதன் மிது தீபத் தூண் ஒன்றும் காணப்பட்டது. இந்த மலைத்தொடருக்கு ’கழிஞ்சமலை’ என்று பெயர். இம்மலையின் தென்கிழக்குப் புறச்சரிவில் செங்குத்தாக நிற்கும் பாறை ஒன்றை காண்பதற்கு இரண்டு நாய் குட்டிகள் ஆகாயத்தை பார்த்து ஊளையிடுவது போல் காணப்பட்டது. கழிஞ்சமலைத் தொடரையும், அங்கு கண்ட சில மலைப் பாறைகளின் அமைப்பு, மற்றும் உருவங்களை வாழ்வில் ஒரு பொழுதும் மறக்க முடியாது. இந்த செங்குத்துப் பாறைக்கு பின்னால்தான் சமணர்கள் வாழ்ந்த இடம் உள்ளது.
கழிஞ்சமலையில் உள்ள சமணர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள… 

கழிஞ்சமலை தமிழி கல்வெட்டுகள்... படிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக