30 நவ., 2013

வைகையில் கரையேறிய திருவேடகம்...

திருவேடகம் என்றாலே தென்னை மரங்கள் தான் நினைவில் நிற்கின்றன. வைகை ஆற்றங்கரையில் தென்னை, வாழை, வெற்றிலை, நெல் என விவசாய நிலங்கள் சூல இயற்கையின் மடியில் திருவேடகம் சிற்றூர் அமைந்துள்ளது. வைகையின் ஆற்றுப் பாசனத்தால் இப்பகுதியை எங்கு நோக்கிலும் செழிமை நிறைந்து காணபடுகிறது. திருவேடகம் ஏடகநாதர் கோயில் மற்றும் வைகையின் சிறப்பை அறிந்துகொள்ளவும் பசுமை நடை குழுவினரோடு ஞாயிறு அதிகாலை எங்கள் ஊர் நண்பர்களுடன் சேர்ந்து சென்று வந்தேன்.  மேலக்காலை அடுத்த வைகை ஆற்றங்கரையில் ஓங்கி வளர்ந்து நின்றிருந்தது தென்னை மரங்கள். கார்த்திகை மாத அதிகாலை மூடுபனியில் கதிரவன் மெல்ல வானில் வந்தான். இளமஞ்சள் நிற வானில் ஓவியமாய் தென்னை மரங்கள் அசைந்து கொண்டிருந்தன.
மேலக்காலில் செல்லும் வைகை நதியைக் கடந்து திருவேடகத்திற்கு சென்றோம். வாகனங்களை எல்லாம் வைகை நதியோரம் அமைந்த படித்துறைக்கு அருகில் நிறுத்திவிட்டு ஏடகநாதர் கோவிலை நோக்கி நடந்தோம். இம்முறை பயணத்தில் 125க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவிலுக்குச் செல்லும் பாதையின் இரு பக்கங்களிலும் பழமையான ஓட்டுவீடுகள், திண்ணைகளோடு காணப்பட்டது. இப்போதெல்லாம் திண்ணை வைத்த வீடுகளை காண்பதே அரிதாக உள்ளது. கொவிலின் நுழைவாயிலில் இராயகோபுரம் அமைக்கு இடம் பாதியிலே நிறுத்தப்பட்டு காணப்பட்டது. கோவிலின் இரண்டு முதன்மை கோபுரங்கள் வண்ணங்கள் தீட்டப்பட்டு சிலைகளோடு அழகாக காட்சி தந்தது.நண்பர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டு வந்தனர். சில நண்பர்கள் கோவிலின் அழகை தங்கள் நிழற்படக் கருவிகளில் பதிவு செய்து கொண்டிருந்தனர். கோவில் வெளிப் பிரகாரத்தில் அனைவரும் அமர்ந்தோம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கோவிலைப் பற்றியும், இவ்வூரைப் பற்றிய  வரலாற்றுச் செய்திகளை கூறினார். அவர் கூறிய செய்தி கீழே…திருவேடகம் என்ற இந்த ஊரிலே இன்று கூடியிருக்கிறோம். மதுரைக்கு அருகிலே உள்ள ஓர் அழகான ஊர். சங்க காலத்திலேயே இவ்வூர் முக்கியமான நிலவியல் பகுதியாக இருந்திருக்கிறது. சென்ற முறை கொங்கர் புளியங்குளத்தில் பாகனூர் என்ற கல்வெட்டு செய்தியை பார்த்தோம். அந்த பாகனூர் தான் திருவேடகத்தின் அருகில் உள்ள சோழவந்தான். பாகனூர் கூற்றம் என்ற சொல் பயன்பட்டுள்ளது. கூற்றம் என்பதனைத்தான் இப்போது வட்டம் (தாலுகா) என சொல்கிறோம். பல்யாக சாலை பெருவழுதி என்ற சங்ககால பாண்டிய மன்னன் இந்த பகுதியை பிரம்மதேயம் என சொல்லக்கூடிய பிராமணர்கள் வாழிடமாக அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். வேள்வி செய்வதற்காக வழங்கப்பட்டதால் வேள்விக்குடி என்று வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்த செய்தியை வேள்விக்குடி செப்பேடு என்ற ஒரு பாண்டிய கால செப்பேடு கூறுகிறது. பராந்தக நெடுஞ்செழிய வரகுணன் என்ற அரசன் 768 முதல் 815 வரை ஆட்சி செய்த காலத்தில்தான் அந்த செப்பேடு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ‘சோழவந்தான்’ என்ற பகுதியே முன்பு பாகனூர், வேள்விக்குடி என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. சோழர் குலத்தை அழித்தவன், சோழர் குலத்துக்கு அந்தகம் விளைவித்தவன் என சொல்லி சோழன் தலை கொன்ற வீரபாண்டியன் என்ற மன்னன் (946 முதல் 966 வரை ஆட்சி செய்தவர்) பெயரால் 10-ஆம் நூற்றாண்டில்சோழகுலாந்தக சதுர்வேதி மங்கலம்’ என பெயர் பெற்றது. பின் பேச்சு வழக்கில் சோழவந்தான் என்றானது.
ஏடகம்’ என்ற பெயர் ஏழாம் நூற்றாண்டு தேவாரப் பாடல்களில் நமக்கு கிடைத்திருக்கிறது. பாண்டிய நாட்டில் 14 தலங்கள் தேவாரப் பாடல்களில் பாடப்பட்டுள்ளது. ஏடகநாதர் கோவில்’ பற்றிய செய்திகள் சங்க காலத்தில் இருந்ததாக குறிப்புகள் இல்லை. ஏழாம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தரால் தேவாரப்பாவில் பாடப்பட்டுள்ளது. துவக்கத்தில் கருவறை மட்டுமான வடிவமைப்பில்தான் இருந்துள்ளது. 16’ம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சி வருகின்ற பொழுது இந்த கோவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது திருச்சுற்றில் கோபுரம் கட்ட உத்தேசித்து அது பாதியில் நின்றுவிட்டது. அங்கு ஒரு கல்வெட்டு உள்ளது. ஆனால் அரசர்கள் பெயர் இல்லை. எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும் போது 16’ம் நூற்றாண்டு என்று சொல்கின்றோம். விஜய நகர ஆட்சிக் காலத்தில் இந்து சமயத்தின் எழுச்சி காலம் என்று சொல்வார்கள். சங்ககாலம் முதல் இருபதாம் நுற்றாண்டு வரை பல கால கட்டங்களில் இக்கோவில் பாதுகாக்கப்பட்டு விரிவு படுத்தப்பட்டுள்ள முக்கியமான சைவத்தலம்.
சாந்தலிங்கம் அவர்களின் உரைக்கு பிறகு, கோயிலிலிருந்து வைகை நதியின் படித்துறைக்கு வந்து சேர்ந்தோம். பசுமை நடை நண்பர்கள் அனைவரும் இணைந்து படிகட்டுகளை சுத்தம் செய்தோம். நெகிழி பைகள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏன் நெகிழிக்கு பதிலாக முன்பு போல் துணிப்பைகளை உபயோகிப்பதில் நம்மவர்களுக்கு என்ன சிரமம் என்று புரியவில்லை. என்று இந்த நிலை மாறுமோ ? வைகை நதி சிறிதளவு படித்துறையை ஒட்டியவாறு ஓடிக்கொண்டிருந்தது. அனைவரும் வைகை நதியில் தங்கள் கால்களை நனைத்து கொண்டு வைகை ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றோம். 
அனைவரும் ஆற்றின் மையப்பகுதியில் கதிரவனின் கதிர் ஒளியின் முன்னர் அமர்ந்தோம். பசுமை நடையின் நிறுவனர் அ.முத்துகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று சிறு உரையாற்றினார். இங்கே ஓடக்கூடிய தெளிந்த நீர் மதுரை நகரைக் கடந்து செல்லும் போது சொல்ல முடியாத அளவுக்கு சாக்கடையாகிறது. அதற்கு மதுரைவாசிகளான நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. நகரவாசிகள் எங்கு போனாலும் அந்த இடத்தை அசிங்கம் செய்திடுவார்கள் என்பதை நாம் செய்திடக் கூடாது. அதே போல் நாம் இங்கிருந்து திரும்பிப் போகும் போது நாம் வந்து சென்றதற்கான சிறு தடயம் கூட இல்லாமல் இருக்க நாம் பழக வேண்டியுள்ளது என்று கூறினார்.
சாந்தலிங்கம் அய்யா கூறுகையில், நண்பர்களே நாம் இன்று தண்ணீரே இல்லாத வைகையிலே அமர்ந்துள்ளோம். மணலாவது மிச்சம் இருக்கிறது. “ ஆனால் ஒரு காலத்தில் இரண்டு கரையையும் தண்ணீர் தொட்டுக் கொண்டு போனதாக பாடல்கள் இருக்கின்றன. வைகை ஒரு ரோசமான ஆறு. இதனால் வைகை கரையில் வாழுகிற மக்களும் ரோசமானவர்கள் என எடுத்துக்கொள்ளலாம். வைகை கடலில் கலக்காது என்ற கருத்து உள்ளது. ஆனால் வைகை கடலில் கலக்கவே செய்யும்.
ராமநாதபுரத்தை தாண்டி அழகன்குளம்’ என்ற இடம் உள்ளது. அது பழைய துறைமுகப்பட்டினம். ராமநாதபுரத்திற்கும் அழகன்குளத்திற்கும் நடுவில் நரிப்பாலம்’ என்ற இடம் உள்ளது. அந்த நரிப்பாலத்தின் வழியாக அழகன்குளத்தில் கடலோடு கலக்கிறது. புராண ரீதியாக வைகை கடலில் கலக்காது என சொல்லப்படுகிறது. வைகைக்கு கடல் மேல் கோபம் என சொல்லப்படுகிறது. பாற்கடலை கடையும் போது கடல், சிவபெருமானுக்கு நஞ்சு கொடுத்துவிட்டது அதனால் வைகை கடல் மேல் ரோசம் கொண்டதாக சொல்லப்படுகிறது.
வைகையின் பின்னனி வரலாற்றை பார்க்கும் போது 7ம் நூற்றாண்டில் சைவத்திற்கும் சமணத்திற்கும் இடையே பூசல் ஏற்படுகிறது. கூன்பாண்டியன் என்ற நின்ற சேர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னன் சமண சமயத்தை தழுவினான். அவருடைய மனைவி மங்கையர்க்கரசி சோழர் பெண் அரசி. குலச்சிரையார் என்ற மந்திரி சைவத்திற்கு ஆதரவாக இருக்கிறார். எப்படியாவது அரசரையும் சைவத்தின்பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது திருஞான சம்பந்தர் பதிகம் பாடிக்கொண்டு மதுரைக்கு வருகிறார்.
திருஞான சம்பந்தர் உருவாக்கிய மடம்தான் இப்போதுள்ள மதுரை ஆதீன மடம் அங்கு வந்து தங்குகிறார். அப்போது அவரது எதிரணியிணையைச் சேர்ந்த சமணர்கள் அம்மடத்திற்கு தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. திருஞான சம்பந்தர் இந்த வெப்பம்பாண்டியனுக்கு பையவேஎன பாடியவுடன் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோயை கொடுக்கிறது. அந்த நோயில் இருந்து மன்னனை காப்பாற்ற அவர் சார்ந்த சமண துறவிகள் முயற்சிக்கிறார்கள். மருத்துவர்களை கொண்டு முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால் அந்நோய் நீங்கவில்லை. பிறகு திருஞான சம்பந்தர் சென்று திருநீற்று பதிகம் பாடி திருநீறு பூசிய உடன் அவருடைய நோய் குணமாகிறது.
இதற்கு பிறகுதான் யாருடைய சமயம் வலிமையானது என வாதம் நடக்கிறது. அனல்வாதம் புனல்வாதம் என இரு வாதங்களை செய்ய வேண்டும் என முடிவு செய்கின்றனர். அனல்வாதம் என்பது சமணர்களின் மந்திரத்தையும் சைவர்களின் மந்திரத்தையும் தனித்தனியாக ஓலையில் எழுதி நெருப்பில் இட வேண்டும் அதில் எது எரிந்து போகாமல் இருக்கிறதோ அதுவே வென்றதாகக் கொள்வது.
புனல்வாதம் இங்கு நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. சமணர்களின் மந்திரத்தையும் சைவர்களின் மந்திரத்தையும் தனித்தனியாக ஓலையில் எழுதி ஓடுகின்ற வைகையிலே போட வேண்டும். அதில் எது ஆற்றின் எதிராக பயணித்து கரை ஏறுகிறதோ அதுவே வென்றதாக முடிவு செய்வதாகும். அப்போது சமணர்கள் போட்ட ஏடுகள் எல்லாம் ஆற்றில் அடித்து சென்று திருப்பாச்சேத்தி என்ற பகுதியில் கரை ஒதுங்கியதாக சொல்லப்படுகிறது. திருப்பா சேர்ந்த இடம் என்பதனால் திருப்பாச்சேத்தி என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. சைவர்களின் ஏடுகள் இங்கேயே கரை ஏறியதாகவும் அப்படி ஏடகம் ஏறியதால் ஏடகம் என்றும் பிற்பாடு திருவேடகம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புகளை பெற்ற ஊராக இந்த திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
அய்யா அவர்களின் உரையை கேட்ட பின்பு அங்கேயே அமர்ந்து பசுமை நடைக்க் குழுவினர் வழங்கிய காலைச் சிற்றுண்டியை உண்டோம். ஆற்றின் மையப் பகுதியில் மணலில் அமர்ந்தவாறு சுற்றிலும் தென்னை மரங்கள் சூல இயற்கையோடு இணைந்து உணவு உண்பதற்கு அரிய வாய்ப்பை வழங்கிய பசுமை நடை குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். பின்னர் ஆற்றைக் கடந்து அனைவரும் ஊர் திரும்பினோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக