5 ஜன., 2014

வேர்களை விட்டு விலகிடாமல் இருந்திடுவோம்...

கிளைகள் எவ்வளவு தூரம் படர்ந்திருந்தாலும் வேர்களைவிட்டு விலகி இருக்க முடியாது. மனிதர்களும் அப்படித்தான். எவ்வளவு தூரம் பொருள் தேட சென்றிருந்தாலும் நம் குடும்பத்தைவிட்டு விலகி இருக்க முடியாது. குடும்ப விழாக்கள், பண்டிகைகளில் கலந்துகொள்ள எங்கிருந்தாலும், வீட்டிற்கு வந்து நம் சுற்றத்தோடு கொண்டாடுவது நம்மவர்களின் பழக்கம். பல்வேறு வகையான பண்டிகைகள் இருந்தாலும் அதில், தைப்பொங்கல் முக்கியமானது. மற்ற பண்டிகைகள் இறைவழிபாட்டோடு தொடர்பு கொண்டிருந்தாலும், பொங்கல் பண்டிகை மட்டும் தனித்து நம்மைக் காக்கும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாவாக அமைந்திருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கும் திருநாளாகவும் திகழ்கிறது.
சென்னை, கோவை, ஓசூர், திருச்சி, திருப்பூர் போன்ற நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் தென்பகுதி யில் உள்ள திருச்சி மற்றும் மதுரைக்கு கிழக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் பலரும் வேலைக்காக மேற்கூறிய இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். தென்பகுதியில் உள்ள தங்கள் சொந்த ஊர் களுக்கு வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ வந்து செல்லுபவர்கள்தான் அதிகம்பேர். இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான காரணங்களில் தைப்பொங்கல் மற்றும் கோவில் பொங்கல் திருவிழா (கொடை) ஆகியவை மட்டும்தான் ஒருகாலத்தில் அதிகமாக இருந்தது. இன்று அந்த நடைமுறை மெல்லமாறி தீபாவளிக்கும் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காரணம் இவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வழங்கும் தீபாவளி ஊக்கத்தொகை, வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் புதிய தள்ளுபடி சூட்சமங்கள். மாதச்சம்பளம் ஊக்கத் தொகையோடு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சியில் தங்கள் குடும்பங்களைக் காணவும் பண்டிகையை கொண்டாடவும் வந்து செல்கின்றனர். ஆனால், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான தைப்பொங்கலுக்கு அரசு பணியாளர்கள் தவிர, தங்களின் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் ஊக்கத்தொகை ஏதும் வழங்குவதில்லை. ஊக்கத் தொகையை தீபாவளிக்கு மாற்றாக பொங்கலுக்கு வழங்கினால், பொங்கல் திருநாள் தீபாவளி இன்று எந்த அளவிற்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறதோ அதைவிடச் சிறப்பாகக் கொண்டாடப்படும். பொங்கல் திருநாளை எப்போதும் சிறப்பாக கொண்டாடி மகிழ்பவர்கள் விவசாயப் பெருமக்கள்அவர்களுக்கு மட்டுமே தெரியும் பொங்கல் திருநாளின் மகிமை. மற்றவர்களுக்கு எல்லாம் அது ஒரு தொடர் விடுமுறைக் காலமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள சான்றுகளில் ஒன்றானகல்லான உழு’  என்பதிலிருந்தேஉழவன்எனும் சொல் வேளாண்மையோடு தொடர்பாகிறது. அன்று முதல் இன்றுவரை உழவையும், இயற்கையும் தொடர்புபடுத்தி கொண்டாடப் பட்டு வருகிறது பொங்கல் திருநாள். நெல்லும் உழவனும் தைத்திருநாள் கொண்டாட்டத்தின் முக்கிய இரு காரணிகள். வேளாண்மைக்கு இயற்கை செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இயற்கையை வணங்கும் திருவிழா தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருவிழா, அனைத்து மதத்தையும் சார்ந்த விவசாயிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உழவன் நிலத்திற்கும், மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் நாள். நாம் அவனுக்கும், ஒவ்வொரு நெல்லுக்கும் நன்றி சொல்லும் நாள். உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து, அவைகளுக்கு எனத்தனித் திருவிழா எடுத்து சிறப்பித்து வரும் இனங்களில் தமிழனமும் ஒன்று. எருதுகளை இளைஞர்கள் அடக்கும் கற்காலத்து ஓவியங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மலைகளில் காணப்படுகின்றன. மேலும் காளை இன்றும் நம் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. காளை உருவம் கொண்ட இரண்டு முத்திரைகள் மொகஞ்சதாரோ அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   
இன்று நகரம் மற்றும் கிராமங்களில் பொங்கல் பண்டிகையை மிகச்சிறப்பாக கொண்டாடிவந்தாலும், முற்றத்துப்பொங்கல் மற்றும் தொழுவத்தில் பொங்கல் கொண்டாட்டங்களை காண முடிவதில்லை. நாகரீக மற்றும் நவீன மாற்றங்களின் முன்னால் இவற்றை கொண்டாட மக்கள் முன்வரத் தயங்குகின்றனர். அதிகாலை சூரிய உதய நேரத்தில் அனைவரும் புத்தாடைகள் உடுத்தி தங்களின் முற்றத்தில் கொண்டாடுவதற்குப் பதிலாக, சமையலறையில் தினமும் செய்யும் சமையலைப் போல் பொங்கலையும் செய்துவிடுகின்றனர். செய்த பொங்கலை, தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே அமர்ந்து கொண்டு திரையில் வலம் வருபவர்களை கண்டுரசித்து பொங்கல் திருநாளை கொண்டாடிவருகிறோம். நகரங்களில் வாழ்பவர்களுக்கும் வேளாண்மைக்கும் தொடர்பு இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஏன் ? வேளாண் தொழிலுக்கு உதவிசெய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் விவசாயிகளைப் போல், நாமும் நாம் உண்பதற்கு உணவுதரும் விவசாய பெருமக்களுக்கு நன்றி செலுத்தலாமே!   
நம்முடைய உறவினர்கள் அல்லது நண்பர்கள் என விவசாயத்தோடு தொடர்புடைய ஒரு குடும்பத்தினருடன் நாம் ஏன் இந்த பொங்கல் திருநாளை நம் வீட்டுப்பிள்ளைகளுடன் கொண்டாடி மகிழக்கூடாதுநம் வீட்டு இளைய தலைமுறையினருக்கு உணவுப் பொருள்கள் விளையும் இடத்தையும் உழவுத் தொழிலையும் தெரிந்துகொள்ள வாய்ப்பேற்படுத்தித் தரலாம் அல்லவா? நாம் உயிர்வாழத் தேவையான உணவு எங்கிருந்து, எவ்வாறு நமக்கு கிடைக்கிறது என்றே தெரியாமல் வாழும் வாழ்வில் உணவின் மதிப்பை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்.
இவை எவற்றையுமே நாம் புரிந்து கொள்ளாமலும், தெரிந்துகொள்ள விருப்பமில்லாமலும் இருக்கிற காரணத்தினாலேயே வேளாண்மைத் தொழிலை அறிந்துகொள்ளவும், அதன்மேல் விருப்பமற்றவர்களாகவும் நாம் மாறியுள்ளோம். அதன் ஒருபகுதியாக கற்ற கல்வியின் அறிவுமேம்பாட்டால் விவசாயிகள் என்றாலே ஒருவித ஏளனபோக்கு நம்மவர்களிடையே நிலவி வருகிறது. அறிவியலை பாடநூல்வழிக் கல்வியாகக் கற்ற நாம், நமக்குத் தெரியாமலேயே இயற்கைக்கு எதிராக பல்வேறு செயல்களை நாள்தோறும் செய்து வருகிறோம். இயற்கையை எவ்வாறு நாம் மாற்றினோமோ அதற்கேற்றாற்போல் நம் வாழ்வும் உடல் நலமும் நமக்கு எதிராக மாறிவருகிறது. இயற்கையின் தேவையை அலட்சியப்படுத்தின் விளைவாக இயற்கையே இன்று நமக்கு எதிராக மாறிவருகிறது.   
இயற்கையைப் போற்றுபவர்கள் எல்லாம் இன்னமும் நமது கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நமது பண்பாட்டின் வேர்கள் மிக ஆழமாக வேரூன்றி விரிந்து படர்ந்துள்ளன. கிராமங்களில் ஏழ்மையான வர்களின் வீடுகள் கூட வெள்ளை அடிக்கப்பட்டு, மஞ்சள் கிழங்கும், மாவிலையும் கண்ணுப் பிள்ளையும் வாயிலில் நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கும். பொங்கல் தான் கிராமங்களில் வாழ்பவர்களின் பிரதான திருவிழா. அதை எந்தநிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்கள் பொங்கல் திருநாளை இயற்கையை வழிபட்டுக் கொண்டாட, நாமும் இயற்கையோடு துணை நிற்க வேண்டும்
உலகம் எந்திரமயமாகிக் கொண்டு வருகிறது. வேளாண்மைத் தொழிலும் அதற்கேற்றாற் போல் மாற்றப்பட்டு வருகிறது. எந்திரம் இயங்க மின்னாற்றல் அல்லது எரிசக்தி தேவைப்படுகிறது. இவற்றிற்காக இயற்கையை எந்த அளவிற்கு நாம் அழித்து வருகிறோம் என்பதை, விவசாயிகளின் போராட்டங்களை தொலைக்காட்சி வாயிலாக தினமும் நாம் கண்டுவருகிறோம். எது முக்கியம் என்பதை முடிவு செய்ய வேண்டியது விவசாயிகளின் கைகளில் மட்டுமல்ல... நம் கைகளிலும் உள்ளது. அறிவியலை கல்வியாக கற்ற நாம், அந்த அறிவியலை சரியாக பயன்படுத்துகிறோமா என்பதனை நம் சிந்தனையில் சிறிது எடுத்துச் செல்வோம்
தமிழர் திருநாளான பொங்கலைஹேப்பி பொங்கல்என்று வாழ்த்துவதையும், வாசல்களில் கோலங்களுக்கு முன்னால்ஹேப்பி  பொங்கல் / (HAPPY PONGAL)’ என்று எழுதுவதையும் தவிர்க்க வேண்டும். வாழ்த்து வதற்க்கு கூட சொல் இல்லாமலா போய்விட்டது நம் தாய் தமிழில் ? கொஞ்சம் சிந்திப்போம்.
வருகின்ற தைப்பொங்கல் திருநாளை தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கண்டு ரசிக்காமல், நண்பர்களோடும், உறவினர்களோடும் நமக்கு அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்று கொண்டாடுவோம். வண்ண வண்ணக் கோலங்கள், மஞ்சள் கிழங்கு, கண்ணுப்பிள்ளை, மாவிலைத் தோரணம், தித்திக்கும் கரும்பு, புத்தாடைகளுடன் விவசாய நிலங்களுக்குச் சென்று, இயற்கை நமக்கு வற்றாத நீர்வளத்தைத் தரவேண்டும் எனக்கேட்டு வணங்கி, இயற்கைக்கு நன்றி செலுத்தி நினைவு கூர்வோம்.
வேர்களைவிட்டு தனித்து இருக்கும் கிளைகள் வெறும் விறகாகத்தான் இருக்கும். அதேபோல் நம் பாரம்பரியத்தில் மனிதன் வெறும் எலும்பும் தோலும் போர்த்திய உடம்புதான். நம் பண்பாட்டின் அடையாளமாக திகழ்ந்து வரும் பொங்கல் திருநாளை நாம் முறையாக கொண்டாடுவது நம் கடமையாகும். அன்பு பொங்கட்டும், அறிவு பொங்கட்டும், இன்பம் பொங்கட்டும், இனிமை பொங்கட்டும்.

பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக