26 ஜன., 2014

தொல்நகரில் தொல்லியலாளருடன்...

" தொல்லியல் மீதான காதலை விதைத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவுடன் ஒரு கலந்துரையாடல். சாந்தலிங்கம் அய்யா பசுமைநடைப் பயணங்களின் ஊடாக கல்வெட்டுகளைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள காரணமானவர். "
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவந்த கதிர் 2014’  மலருக்காக அய்யா அவர்களை சந்தித்து ஒரு சிறு கலந்துரையாடலை நண்பர் சித்திரவீதிக்காரருடன் சேர்ந்து ஏற்பாடு செய்தேன். கலந்துரையாடலில் அய்யாவிடம் பல வரலாற்று முக்கிய கேள்விகளை முன் வைத்தோம். அய்யா அவர்களும் மிகச்சிறப்பாக நமக்கு விளக்கம் தந்தார். அந்த கலந்துரையாடலை இங்கு உங்கள் முன் வைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதோ அய்யா அவர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம்...
? நீங்கள் விலங்கியலில் இளநிலைபட்டம் பெற்றவர் என்று கேள்விப்பட்டோம். பிறகெப்படி தொல்லியல்துறைக்கு?      
       
விருதுநகர் கல்லூரியில் விலங்கியலில் இளநிலைபட்டம் பயின்று முடித்தேன்.. முதுநிலை அறிவியலில் இடம் கிடைப்பது கடினம். தமிழார்வம் உண்டு. தமிழில் முதுகலை படித்தால் தமிழாசிரியராகப் போகலாம்; தியாகராஜர் கல்லூரியும் புகழ்பெற்றது என்பதால் தமிழில் முதுகலைப் படிப்பை முடித்தேன்.
பிறகு வேலைவாய்ப்புக்கு வழி என்ன என்று யோசித்தபோது, அப்போதுதான் தொல்லியல் பட்டயப்படிப்பு ஆரம்பித்திருந்தார்கள். படித்து முடித்தவர்களுக்கு அப்படியே அரசாங்கத்திலேயே வேலையும் கொடுத்தார்கள். படிக்கும்போதே மாதம் 125ரூ உதவித்தொகையும் கொடுத்தார்கள். சென்னையில் இருக்கலாம். படிக்கும்போது போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளவும் தடையில்லை. எனவே அதில் சேர்ந்தேன். தொல்லியல்  துறைக்கு விருப்பத்தினால் வந்தேன் என்பதைவிட நிர்பந்தத்தினால் வந்தேன் என்பதுதான் சரி.        
 ? எந்த ஆண்டு தொல்லியல் பட்டயப் படிப்பு படித்தீர்கள்
1974ல் தான் தொல்லியலுக்கென்று பட்டயப்படிப்பு தொடங்கினார்கள். நான் 1976ல் சேர்ந்து 1977ல் முடித்தேன். அப்போதுதான் தொல்லியல் துறை சிறிய அளவில் உருவாகிக் கொண்டிருந்தது.தொல்லியல் அலுவலர் என்ற பணியிடங்களை உருவாக்கி ஆட்களைப் புதிதாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
? நா.வானமாமலை, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது       
வானமாமலை அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு ஸ்காலர். நிறையப் பேரை உருவாக்கியவர். நாங்கள் மாணவர் இயக்கத்தில் இருந்தோம். வீட்டில் அப்பா, மச்சான் எல்லாருக்கும் பொதுவுடமை எண்ணங்கள் உண்டு. தியாகராஜர் கல்லூரியில் நான் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பில் (..எஸ்.எஃப்) செயலாளர். அந்த முறையில் தோழர்கள் மூலமாக கட்சி சம்பந்தமாக வானமாமலை அவர்களைச் சந்தித்தபோது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். எம். முடித்திருக்கிறேன் என்றதும் அவர்தான் டிப்ளமா படியுங்கள். நம்ம ஆட்கள் அங்கு இரண்டு, மூன்று பேர் ஏற்கனவே இருக்கிறார்கள் என்றார். எனவே நான் தொல்லியல் துறைக்கு வந்ததற்கு அவரது வழிகாட்டுதலும் காரணம்.
ஐராவதம் மகாதேவன் அவர்களுடன் நீண்ட காலத்துக்கு நேரடிப் பழக்கம் இல்லாமலி ருந்தது. பிராமி கல்வெட்டுகள் பற்றி புத்தகங்களில் படிக்கும் போது கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்த ஒரு .. அதிகாரி, தில்லியில் இருப்பவர் என்ற அளவில்தான் தெரியும். 1991 மற்றும் 92ல் ஐராவதம் மகாதேவன் அவர்கள் மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் மறுஆய்வு (revisit) செய்வதற்காக வந்தார். இரண்டு முறை பதினைந்து, பதினைந்து நாட்களாக முப்பது நாள் வரை தங்கினார். தருமபுரி, தஞ்சாவூரில் வேலைபார்த்துவிட்டு நானும் 1989ல் மதுரைக்கு மாற்றலாகியிருந்தேன். அவர் ஜவகர்லால் நேரு ஃபெல்லோஷிப் பெற்று இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தார். அரசிடம் அனுமதி பெற்று அவரது ஆய்வுப் பணியில் எங்களையும் பயன்படுத்திக்கொண்டார். நான், வேதாச்சலம், ராஜகோபால், போஸ் என நால்வர் இப்பணியில் இருந்தோம்.
எங்களுக்கும் அது உவப்பாகவே இருந்தது. ஏனென்றால் அதுவரை உயரமான இடங்களில் இருந்த கல்வெட்டுக்களை நாங்கள் சற்று தொலைவில் இருந்துதான் பார்க்க முடிந்தது. வேண்டுமென்றால் புகைப்படம் எடுக்கலாம். அவர் இரும்புக்குழாய்களை வைத்து சாரம் (scaffolding) கட்டி ஏறித் தொட்டுப்பார்க்கச் சொல்வார். அறுபது வயதுக்கு மேல் ஆகியிருந்தாலும் அவரும் ஏறிப் பார்ப்பார். தாம் மறுவாசிப்பு செய்துமுடித்த பிறகு வேறு வகையான வாசிப்புகளுக்கு இடமில்லாதவாறு துல்லியமாக வாசிக்கவேண்டும் என்ற முனைப்பு உடையவர். பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றவர்கள் இவ்வாறு சாரம் அமைப்பதற்குத் தேவையான இரும்புக் குழாய்கள், வேலையாட்கள், சரக்கு வேன் கொடுத்து உதவினர். கிடாரிப்பட்டியில் அவற்றை எடுத்துச் சென்று சாரம் அமைக்கவே இரண்டு நாட்கள் ஆனது.   
எங்களுக்கு இது ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது. அவர் கடின உழைப்பாளி. கொஞ்சம்கூட நேரத்தை எவ்வாறு வீணாக்காமல் இருப்பது போன்றவற்றை எல்லாம் அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம். கண்பார்வை கூர்மையானவர்கள், துறை சார்ந்த அறிவும் உடையவர்கள் என்ற வகையில் நாங்களும் அவருக்கு உதவிகரமாக இருந்தோம். இந்த காலகட்டத்தில் அவர் எங்களைப் பற்றியும் நன்கு அறிந்துகொண்டார். பிறகு அடிக்கடி தொலை பேசியில் பேசுவது, கருத்துக்கள் பரிமாறுவது என்று தொடர்பு நீடிக்கிறது.     

?   நீங்கள் எழுதிய புத்தகங்கள் குறித்து
தனிப்பட்ட முறையில் தமிழில் 7 புத்தகங்களும், ஆங்கிலத்தில் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறேன். மற்றபடி தொல்லியல் துறையின் பல நூல்களில் ஆசிரியர்களில் ஒருவனாக (coauthor) பங்களிப்பு செய்திருக்கிறேன். மதுரை, திண்டுக்கல், திருவாரூர் மாவட்டத் தொல்லியல் கையேடுகள், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுக்கள் பற்றிய தொகுதிகள் உள்ளிட்ட இத்தகைய நூல்கள் பத்து வரை இருக்கும். சமீபத்தில் வெளிவந்தது என்.சி.பி.எச் பதிப்பித்த சித்திரமேழி என்ற கட்டுரைத் தொகுப்பு. இவைத் தவிர பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பாகவும் சில நூல்கள் வந்துள்ளன.                             
 ?   நாணயவியலிலும் ஆய்வுகள் செய்திருக்கிறீர்களா
தொல்லியல் துறையில் மாவட்ட அளவில் அதிகாரியாக இருக்கும் போது எனக்கு நாணயவியல்தான் தெரியும், கல்வெட்டுக்கள்தான் தெரியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. கல்வெட்டியல், நாணயவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, புகைப்படக்கலை என எல்லாவற்றைப் பற்றிய அறிவும் வேண்டும். எனக்கும் ஓரளவு உண்டு. பட்டயப் படிப்பிலும் கற்றுத் தருவார்கள். உதாரணத்திற்கு கோயில் கட்டிடக்கலையின் அங்கங்கள், சிற்பங்களில் உள்ள நகைகளின் பெயர்கள் கூடக் கற்றுத்தரப்படும்.  
 ? திருக்கோயில் உலா என்று ஒரு நூல் எழுதியிருக்கிறீர்கள். அதுமாதிரி நூல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. தமிழில் கிடைப்பதில்லை. இந்த புத்தகமும் சென்னையில் தான் கிடைத்தது. மதுரையில் கிடைக்க வில்லை...
ஆமா. அது சேகர் பதிப்பகம் போட்டது. வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்கிற அந்த பதிப்பாளர் எளிமையானவர். வீட்டைவிற்றும் புத்தகம் போடக்கூடியவர். சேகர் பதிப்பகம், அருள் பதிப்பகம் என்ற பெயர்களில் நிறைய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். எனது இரண்டு, மூன்று நூல்களை அவர்தான் பதிப்பித்தார்.
? உங்களுடைய சொந்த ஊரில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகளைப் பற்றி சொல்லுங்கள்
என்னுடைய சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நீராவி. எங்கள் ஊரில் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த தங்க காசு ஒன்றை பொற் கொல்லர் ஒருவரிடம் பார்த்தேன். அதில் கிரந்த எழுத்தில் அக்கம் என எழுதியிருந்தது. அதை அவரிடம் வாங்கி ஆவணப் படுத்தினோம். மேலும், எங்கள் ஊரில் இரண்டு வட்டெழுத்துக் கல்வெட்டை பார்த்தேன். ஒன்று சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. மற்றொன்று ஆநிரை கவர்தல் பற்றிய கல்வெட்டு. எங்க ஊர் அருகிலுள்ள கமுதி அய்யனார் கோயில் என்னும் ஊரில் அரிகேசரி ஈஸ்வரம் என்ற பழைய சிவன் கோயில் உள்ளது. அதில் நந்தியின் மேல் கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது.    
 ? குடுமியான்மலை குறித்த உங்கள் ஆய்வு பற்றி
குடுமியான்மலை பற்றிய என்னுடைய நூலை 160 பக்கங்கள் கொண்ட நூலாக 1981ல் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட்டனர்.             
 ? நாட்டார் வழக்கிலிருந்து கிடைக்கும் தரவுகளை உங்கள் ஆய்வில் சேர்த்துக் கொள்வதுண்டா
சில இடங்களில் உள்ள கல்வெட்டுக்களை வாசிக்க முடியாது. அப்படி வாசித்தால் ஏழு கொப்பரை தங்கம் உள்ள இடம் தெரியும். இதுவரை வாசித்தவர்கள் யாரும் உயிரோடு இல்லை என்பது போன்ற கதைகளைச் சொல் வார்கள். போய் பார்த்தால் சில நேரங்களில் பழையகால கல்வெட்டுகள், பொருட்கள் கிடைக்கலாம்.
 ? பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் பணிகள்...
பாண்டியநாட்டு வரலாற்றை முழுமை யாகப் பதிவு செய்தல், மக்களிடையே வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இம்மையத் திலிருந்து வரலாற்று நூல்களைப் பதிப்பித்தல், கல்வெட்டுகளை வாசிக்க புதிய தலைமுறையைப் பழக்குதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறோம்.      
 ? கல்வெட்டுக்கலை வாசிக்க புதியவர்கள் வருகிறார்களா?
சமீபத்தில் கல்வெட்டுகலை வகுப்பு நடத்தி வருகிறோம். அதில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து படித்து வருகிறார்கள். கட்டணமும் மிகக் குறைவு. மொத்தமே 500 ரூபாய். 12 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர் வகுப்பு நடைபெறுகிறது. இதை மாலை நேர வகுப்பாக, மூன்றுநாள் தொடர் வகுப்பாக நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
? பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்திலிருந்து வெளியீடுகள் குறித்து
கல்வெட்டுக்கலை, தமிழும் சமஸ்கிருதமும் மெய்யும் பொய்யும் என்ற நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம், மாநகர் மதுரை, கோயில்கலை போன்ற நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.        
 ? தமிழியா, பிராமியா, எது முதலில்
 தற்போதுள்ள முடிவுகளின்படி தமிழிதான். இது தமிழ்நாட்டிலேயே உருவானது. அவர்கள் பிராமியில் வர்க்க எழுத்துக்களைக் குறிக்கத் தேவையானவற்றை கூடுதலாக சேர்த்துக் கொண்டார்கள்.
? சோழர், பாண்டியர் போல சேரர் பற்றி அதிகம் நாங்கள் கேள்விப் படுவதில்லையே, ஏன்...        
சேரர்கள் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் குறைவுதான். கரூரில் ஒரு தமிழிக் கல்வெட்டு உள்ளது (இதைவைத்தே சேர நாடு கரூர் வரை இருந்தது என்பர்). சங்ககாலச் சேரர் ஒன்பது பேர் பற்றி பதிற்றுப்பத்தில் வரும் குறிப்புகள் தவிர இலக்கியத்திலும் பெரிதாக எதுவும் இல்லை. சேர நாடு அமைந்திருந்த நிலவியல் சூழல் காரணமாக இருக்கலாம். பாண்டிய நாட்டுடன் தொடர்பு கொள்ள ஆரல்வாய்மொழி போல கணவாய்கள் வழியாகத்தான் வர வேண்டும். படையெடுத்துச் செல்வதும் கடினம் என்பதால் வரலாற்று நிகழ்வுகளும் இங்கு நடந்தவற்றை விடக் குறைவு. வணிகர்களும் சென்று வர வசதி இல்லை.
மதுரையில் உள்ள தொன்மையான இடங்களைப் பாதுகாக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும்
தொன்மையான இடங்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதியும், பேருந்து வசதியும் செய்து கொடுக்க வேண்டும். இப்போதுள்ள அணுகு சாலைகள் பல இடங்களில் சரியாக இல்லை. உதாரணத்திற்கு கொங்கர் புளியங்குளத்திற்கு எளிதாகப் போக முடியாது. முத்துப்பட்டி அருமையான இடம். அதற்கும் அணுகு சாலை சரியில்லை. கிடாரிபட்டி, மீனாட்சிபுரம் போன்ற இடங்களுக்கும் சாலை வசதி இல்லை. மேலும், அவ்விடங்களில் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் பலரும் வந்து செல்ல வசதியாகயிருக்கும்.
 ?   இந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது குறித்து
நம் தொன்மையான சின்னங்கள் நம் இனத்தின் அடையாளம். நமது சொந்த நிலத்தைப் எப்படி பாதுகாப்போமோ அது போல இந்த பாரம்பரியச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நம் வரலாற்றை அறிந்து கொள்ள இதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.
?   பொங்கல் குறித்து... 
அறுவடைத் திருநாள். சூரியனுக்கும், உழவுமாடுகளுக்கும், உற்பத்தி கருவிகளுக்கும், உழவர்களுக்கும் நன்றி செலுத்தும் நாள். இதுவே தமிழர்களின் உழைப்பாளிகளின் விழா. தமிழர்கள் தவறாமல் கொண்டாட வேண்டியது இதுதான். மற்றவையெல்லாம் சமயம் சார்ந்த விழாக்களே. இதுவே பொதுவான விழா. அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக