19 ஜூலை, 2015

குற்றால அருவியிலே...

சரியாக சூன், சூலை மாதங்களில் குற்றால சீசன் தொடங்கிவிடும். ஆகஸ்ட் மாதம் வரை சீசன் குறையாது. தற்போது பருவகால மாற்றங்கள், மழை பெய்யா எனக் குற்றாலத்தில் நீர் வருவதை காண மக்கள் எந்நேரமும் காத்துகிடக்க வேண்டியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழை பெய்துவிட்டால் குற்றாலத்தைச் சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டாட்டந்தான். அவர்களுக்குத்தான் முதலில் செய்தி கிடைக்கும் என்பதால் குற்றாலக் குளியல் அவர்களுக்குத்தான் முதல்வசம். பின் அங்கிருந்து செய்தி பரவி வெளியூர் மக்களுக்குச் சென்றடையும்.
மக்கள் அங்கு வரும் முன் சில நேரங்களில் நீர்வரத்து குறைந்துவிடும். வருபவர்கள் ஏமாற்றமடைந்து செல்வர். சில நேரங்களில் அருவி ஆர்பரித்து நீரைக் கொட்டும். அப்படிப்பட்ட நேரங்களில் வெளியூர்களில் இருந்து வருபவர்களின் மகிழ்ச்சி அருவியின் வேகத்தைவிட இரட்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட மகிழ்ச்சியை பெற்றுவர உறவினர் இருவரோடு சேர்ந்து குற்றாலம் சென்றுவந்தேன். 


சரியாக மாலை 4 மணியளவில் குற்றாலத்திற்குள் எங்கள் வாகனம் நுழைந்தது. குற்றாலம் செல்லும் முன்னரே கார் மற்றும் வேன்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதை காண முடிந்தது. முதலில் ஐந்தருவிக்கு சென்றோம். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தண்ணீர் வரத்து சுமாராக இருந்தது. மக்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டும், கூட்டத்திற்குள் முண்டிக் கொண்டு குளிப்பதுமாக காணப்பட்டது. ஒரே சத்தம் குளிர்ச்சியான அருவி நீர் உடலில் பட்டவுடன் எழும் பேரானந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடே அது. இரண்டு அருவிகள் ஆண்களுக்கும், இடதுபுறமாக மூன்று அருவிகள் பெண்களுக்கும் என பிரித்து வைக்கப்பட்டிருந்தது. இம்முறை நீர்வரத்து சற்று குறைவாக இருந்தாலும் குற்றால அருவி குளியலை மக்கள் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நானும் கால்சட்டை ஒன்றை அனிந்து கொண்டு மக்களோடு அருவியில் இணைந்தேன். கூட்டத்திற்குள் உள்ளவர்கள் வெளியே வர மனமே இல்லாமல் குளித்துக் கொணிருந்தனர். நாங்களும் குளிக்கத்தான வந்திருக்கோம் வெளிய வாங்கய்யா என்றவாறு உள்ளே முண்டியவாறு நுழைய முயற்சித்தேன். பல இடங்களில் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு முதலாவதாக வர முயன்ற அனுபவங்கள் இங்கும் கை கொடுத்தது. நீர் ஐஸ்ஸாக இருந்தது. ஒரு வழியாக நானும் கூட்டத்தை இடித்துக் கொண்டு நீர் கொட்டும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன்.
ஆகா… அப்படியொரு ஆனந்தம். குளிர்ந்த நீரில் முழுவதுமாகக்  கரைந்தேன். மடார்... மடார் என அருவி நீர் தலையை அரைந்துவிட்டு சென்று கொண்டிருந்தது. பல ஆண்டுகளாக குற்றாலம் வர வேண்டும் என ஆசை இருந்தது. இன்றைய குளியலில் அது நடந்தது. போதும் போதும் என்னும் அளவிற்கு குளித்தேன். நீர் விழும் இடத்திற்குள் தொந்தரவாக அமைந்தது கூடவே இடித்துக் கொண்டு நிற்பவர்களின் தொப்பை மட்டுமே. குளிக்கின்றவர்கள் அனைவருமே குடிமகன்களாகவே காட்சி தந்தனர். அப்படி என்ன ஒரு குளியலோ போதையோடு.
பின்னர் அங்கிருந்து ‘பிராதான அருவி அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தோம். தொலைவிலேயே அருவி விழும் காட்சி தெரிந்தது. பெரிய கடைவீதி, இருபுறமும் கடைகள். விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் நேந்திர வாழைப்பழ சிப்ஸ் கடைகள் என நிறைந்திருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் குற்றாலம் வந்துள்ளேன். இன்றைய நிலைக்கும் அன்றைய நிலைக்கும் பல மாறுதல்கள் உருவாகியிருந்தன. ’குறு ஆல்’ என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் இப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டுள்ளது எனப் படித்துள்ளேன். கடைவீதியை அடுத்ததாக திருக்குற்றாலநாதர் திருக்கோயில் அமைந்திருந்தது. கோவிலைக் கடந்து அருவி விழும் இடத்திற்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. மேலே உள்ள ஓவியமானது, 200 வருடங்களுக்கு முன்பு குற்றாலம் மெயின் அருவி எப்படியிருந்தது எனபதை விளக்கும் வில்லியம் டேனியல் என்ற ஆங்கிலேய ஓவியரால் தீட்டப்பட்ட ஓர் ஓவியம்.


அருவியில் நீர்வரத்து குறைவில்லை அதிகமும் இல்லை என்றிருந்தது. நீர் மிக உயரத்தில் இருந்து விழுந்து கொண்டிருந்தது. ஐந்தருவியில் எப்படி முண்டியடித்துக் கொண்டு குளித்தோமோ அதே முறையை இங்கும் அமுல்படுத்தினோம். குளிப்பவர்களின் பாதுகாப்பிற்காக காவல்த் துறையினர் உதவிக்கு நின்றிருந்தனர்.   ஐந்தருவியை விட பிராதான அருவியில் நீரின் குளிர்ச்சியும் நீரின் அளவும் அதிகமாயிருந்தது. நேரமும் மாலை 6 தொட்டுக்கொண்டிருந்ததால் நீரின் குளிர்ச்சி அதிகமாக தெரிந்தது. அருவிநீர் விழும் இடத்தில் மலையில் பல சிவலிங்கம் மற்றும் உமையாளின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டது. மிக அருமையான குளியலை முடித்துக்கொண்டு திரும்பினேன். குளியலுக்குப் பிறகு திருக்குற்றாலநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்துவிட்டு, வழிக்கடையில் சூடான தேநீரை அருந்திவிட்டு ஊர் திரும்பினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக