25 ஜூலை, 2015

பராங்குசப் பேரேரியும் ஏழு கண் மடையும்...

இராசபாளையத்தில் ஜூலை 18,19களில் தமிழக தொல்லியல் கழகத்தின் 25ம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 26வது ’ஆவணம்’ இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவை மதுரையில் செயல்பட்டு வரும் ‘பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்’ ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் மற்றும் இலங்கையிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், நிழற்ப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
விழாவில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. பல தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களின் நிழற்படங்கள் மற்றும் கல்வெட்டுகள், வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய நிழற்ப்படங்களின் தொகுப்பு கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளான ஜூலை 19 தேதி காலை 7 மணியளவில் கருத்தரங்கத்திற்கு வந்திருந்தவர்களை அழைத்துக் கொண்டு ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஏழு கண் மடை, திருமலை நாயக்கர் மகால் மற்றும் ஆண்டாள் கோவிலில் உள்ள வரலாற்றுத் தகவல்களை அறிந்துவர நிகழ்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு அருகே அமைந்துள்ள பெரிய கண்மாய் எனப்படும் ‘ஸ்ரீ பராங்குசப் பேரேரியையும்’ அதன் நீர்கடத்து மற்றும் கட்டுபடுத்தும் பகுதியான ஏழு கண் மடையையும் கண்டோம். ‘பராங்குசப் பேரேரி’ எனப்படுவது ஸ்ரீவில்லிபுத்துர் அருகே அமைந்துள்ள பெரிய கண்மாய். இவ்விடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இப்பெயரை வைத்து காணும் பொழுது வரலாற்றுத் தொடர்பு உடையதாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இராசபாளையம் செல்லும் போது வலதுபுறம் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயே கல்வெட்டுகளில் ‘ஸ்ரீபராங்குசப் பேரேரி’ என்றும் ‘பராங்குசப்புத்தூர் பெருங்குளம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியநாத சுவாமி கோயில் கருவறை தென்சுவரில் செதுக்கப்பட்டுள்ள எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியனின் கல்வெட்டொன்று ‘ஸ்ரீவில்லிபுத்தூர் உடையார் திருக்கற்றளீசுவரமுடைய நாயனார் கோயிலிற் தானத்தாற்கு இவ்வூர் ஸ்ரீபராங்குசப் பேரேரியிலே இந்நாயனார் தேவதானமான நிலத்திலே’ என்று குறிப்பிடப்படுவதிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலிற்குரிய தேவதான நிலங்கள் இவ்வேரியின் நீர்பாசனத்திற்கு உட்பட்டவையாக அமைந்திருந்து உள்ளமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
தகவல்கள் உதவி: வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம் நூல்.
இக்கண்மாய்க்கு ஏன் பராங்குசப் பேரேரி என்று பெயர் வந்துள்ளதை பற்றிக் காண்போம். கண்மாய்க்கு அருகிலேயே பராங்குசப்புத்தூர் என்னும் ஊர் ஒன்று அமைந்திருக்கின்றது. பராங்குசப்புத்தூர் பெருங்குளத்திருகமைக்கபட்ட மடை ஒன்றுக்கும் அம்மடை மூலமாகப் பெருங்குளத்திலிருந்து வரும் தண்ணீரை எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட வாய்க்காலுக்கும், ஆண்மர் நாட்டுக் கிழவனான சங்கரன் – மூரி அருளாக்கியின் பெயரை வில்லிபுத்தூர் மகாசபையார் வைத்ததாக வட பெருங்கோயிலில் இலட்சுமி நரசிம்மர் சன்னதி நுழைவுப் பகுதியில் செதுக்கப்பட்டுள்ள சடையமாறன் காலக் கல்வெட்டு கூறுகின்றது.
இதிலிருந்து கண்மாய்க்கு மட்டுமில்லாமல் கண்மாயை ஒட்டி அமைந்திருந்த ஊர்ப் பெயருக்கும் பராங்குசன் பெயர் வழங்கிவந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. யார் இந்த பராங்குசன் ?
முற்கால பாண்டிய மன்னர்களில் செழியன் சேந்தனுக்கும், கோச்சடையன் இரணதீரனுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்தவனாகிய ‘அரிகேசரி பராங்குச மாறவர்மனாகிய நின்றசீர் நெடுமாறனை (கி.பி 624 – 672) இரண்டாம் இராசசிம்ம பாண்டியனின் சின்னமனூர் செப்பேடு ‘வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற் சங்கரமங்கைப் பல்லவனையும் புறங்கண்ட பராங்குசன்’ எனக் குறிப்பிட்டு இருப்பதிலிருந்து இம்மன்னனின் பெயராலேயே பராங்குசப்புத்தூர் என்ற ஊர்ப்பெயரும், பராங்குசப் பேரேரி என்ற குளப்பெயரும் வழங்கிவந்துள்ளன எனக் கருதலாம். இவ்வடிப்படையில் பராங்குசப்புத்தூரும், பராங்குசப் பேரேரியும் கி.பி 7ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதை அறிய முடிகிறது.
தகவல்கள் உதவி: வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம் நூல். 

பெரிய கண்மாயின் எதிர்புறம் சாலையில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் இடது பக்கத்தில் கண்மாயில் இருந்து நீர் திறக்கும் பொழுது, நீரின் வேகத்தில் மடையின் பகுதிகள் சேதமடையாமல் தடுப்பதற்காக ஒரு தூம்பு (பெரிய கருங்கல்) மடையின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. தூம்பைச் சுற்றி நீர் வெளியேறுவதற்காக ஏழு கண்கள் (துளைகள்) கொண்ட மடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தூம்பில் உள்ள கல்வெட்டு இதன் தொன்மையை கூறுகின்றது. மடையை ஒட்டிய பாலத்தில் இரண்டு யானைகளுக்கு இடையே அமர்ந்த நிலையில் பெண் தெய்வம் ஒன்றின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் இரண்டு அல்லது மூன்று கண்கள் கொண்ட மடைகளை பார்த்திருப்போம். தமிழகத்திலேயே நீரை ஒரு கண்மாயில் இருந்து ஏழு வழிகளில் கடத்தும் முறை இங்கு மட்டுமே உள்ளது. மடை அமைப்பதற்காக பெருங்கற்பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடுவே உள்ள தூம்பின் பின்புறத்தில் தாமரை மேல் அமர்ந்த விநாயகரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் உருவம் உள்ள பக்கம் தவிர்த்து ஏனைய மூன்று பக்கங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் பார்ப்பதற்கு கிரந்த எழுத்துமுறையை ஒட்டியது போல் உள்ளது. 
ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையின் இடதுபுறத்தில் இம்மடை அமைந்துள்ளது. இது பாலத்திற்கு கீழ் இருப்பதால் இதனை யாரும் அறியாவண்ணம் இருந்து வருகிறது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் அதிகம் நிகழ்ந்துவருவதால் இச்சாலையை விரிவாக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிலை நிகழுமாயின், சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இவ்வரலாற்றுப் புகழ்வாய்ந்த மடையை பாதுக்காக்கும்  வண்ணத்தில் அவ்விரிவாக்கச் செயல்கள் நடைபெற வேண்டும். இம்மடையை காண விருப்பம் உள்ளவர்கள் வாய்ப்பு கிடைப்பின் ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள். 
மடை சேதப்படாமல் அதன் மேல் பாலம் அமைத்து மடையைப் பாதுகாத்து செயல்பட்டால் இவ்வரலாற்று புகழ்வாய்ந்த ‘ஏழு கண்கள் கொண்ட மடையை’ நம் எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். மிகச் சிறப்பான வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ள உதவியாக இருந்த மதுரை ‘பாண்டிய நாட்டு வரலாற்று மையம்’ நிரிவாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த கட்டுரையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள திருமலை நாயக்கர் மகாலைப் பற்றிய செய்தியை காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக