13 அக்., 2012

சிவன் விஷ்ணு இணைந்த சங்கரன்கோவில்...


பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். முதலில் கழுகுமலையை பார்த்துவிட்டு இரண்டாவதாக சங்கரன்கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். சங்கரன்கோவில் நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோவிலில் உள்ள இறைவன் சங்கர நாரயணன் என்று அழைக்கபடுகிறார். சங்கரன்கோவில் ஒரு சிவஸ்தலம்.
அரசு ஆவணங்களில் இந்த ஊர் பெயர்சங்கர நைனார் கோவில்’ என்று தான் உள்ளது. காலபோக்கில் மருவி சங்கரன்கோவில் என்று தற்பொழுது அறியபடுகிறது. மதுரையை ஆண்ட உக்கிரம பாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது. இக்கோயிலின் தொன்மை கி.பி.1022.  இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சங்கரநாராயணனின் சன்னதி உள்ளது. சிவபெருமானும் விஷ்ணுவும் சரிபாதியாக காட்சி தருகின்றனர். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலைப் பற்றியோ இத்திருவிழா பற்றியோ தொல் இலக்கிய குறிப்புகளோ கல்வெட்டு குறிப்புகளோ இதுவரை கிடைக்கவில்லை. எனவே இக்கோயிலைப் பழமையான சிவன் கோவில் என்று கோவில் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இக்கோயிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக இங்குள்ள பாம்புப் புற்று மண்ணே வழங்கப்படுகிறது. அதற்கான காரணம், இக்கோவிலுக்கு அருகிலுள்ள மாவட்டங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருப்பதால், இங்கு குடியிருப்பு பகுதிகளில் பாம்பு மற்றும் பிற நச்சு உயிரினங்கள் வந்து செல்லும். எனவே அவைகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக இக்கோயிலுக்கு வேண்டிக்கொள்கின்றனர்.
கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு - 2002 )
புற்றுமண் கோமதி அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் சேமிக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் நேர்த்திக் கடனாக வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக் காலங்களிலோ சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண் - புற்றுமண் என்று பனை ஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டு வந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். புற்றுமண் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
கோவிலுக்கு நண்பர்கள் அனைவரையும் கண்ட கோவில் நிர்வாகிகள் எங்களைப் பற்றிய தகவல்களையும் எதற்காக வந்துள்ளீர்கள் என்றும் கேட்டனர். வரலாற்று ஆய்வு மாணவர்கள்  என்றதும் எங்கள் அனைவரையும் வேண்டா வெருப்பாக கண்டதையும், சில இடங்களுக்கு அனுமதி வழங்காததையும் வைத்து பார்க்கும் பொழுது இக்கோவின் உண்மை வரலாறு மறைக்கப்படுவதாக தோன்றியது. வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களும் அதனை ஒத்தே அமைந்தன. வரலாற்று ஆய்வாளர்கள் இக்கோவில் முன்பு சமண மதத்தாரிடம் இருந்து வைணவம் மற்றும்  சைவத்திற்கு மாறியிருக்க வேண்டும் என்கின்றனர்.
கோவிலுக்கு உள்ளே தேக்கு மரத்தினால் ஆன பெரிய தேர் ஒன்று காணப்பட்டது. இத்தேர் உலா வருவதில்லை. மிகவும் பழமையான தேர். தேரில் சிற்பங்கள் பல மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது. கோவிலின் அமைப்பை சுற்றிப் பார்த்துவிட்டு, பின் அங்கிருந்து அருகிலுள்ள நண்பர் ஒருவரது வீட்டிற்குச் சென்றோம். பசுமைநடைக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மதிய உணவு அவரது வீட்டு மாடியில்தான் வழங்கப்பட்டது. எங்களுக்கு உணவருந்த இடம் கொடுத்த அவருக்கு எங்களது நன்றிகளைக் கூறினோம். மதிய உணவை முடித்து கொண்டு, பின் அங்கிருந்து சங்கரன்கோவிலுக்கு அருகிலுள்ள வீரசிகாமணி நோக்கி வரலாற்றுப் பயணம் தொடர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக